திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் நவ.13-ல் குருப் பெயர்ச்சி விழா :

By செய்திப்பிரிவு

குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் (குரு பரிகாரத் தலம்) நவ.13-ல் குருப் பெயர்ச்சி விழா நடைபெற உள்ளதையொட்டி, நேற்று பந்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு ஆண்டுக்கு ஒருமுறை இடம்பெயர்வது குருப் பெயர்ச்சி என அழைக்கப்படுகிறது. அதன்படி, நவ.13-ம் தேதி மாலை 6.21 மணிக்கு குரு பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார்.

இதையடுத்து, தஞ்சாவூர் அருகே உள்ள குரு பரிகாரத் தலம் என போற்றப்படும் வசிஷ்டேஸ்வரர் கோயிலில் நவ.13-ம் தேதி குருப் பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. இதையொட்டி, கோயிலில் பந்தகால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கோயில் செயல் அலுவலர் மா.தனலெட்சுமி மற்றும் உபயதாரர்கள், ஊர் பொதுமக்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, வசிஷ்டேஸ்வரர், குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் பந்தகால் மரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, முகூர்த்தம் செய்து நடப்பட்டது.

நவ.13-ம் தேதி மாலை 6.21 மணிக்கு குருப் பெயர்ச்சி நடைபெறுவதால், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ளலாம்.

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கப்படுவதால், குருப் பெயர்ச்சி அன்று பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர். அர்ச்சனை, சிறப்பு வழிபாடுகள் ஏதும் கிடையாது.

மேலும், குருப் பெயர்ச்சியை முன்னிட்டு நவ.15-ம் தேதி ஒருநாள் மட்டும் லட்சார்ச்சனை நடைபெறும். அதேபோல, நவ.21-ம் தேதி சிறப்பு பரிகார ஹோமம் நடைபெற உள்ளது. இதில் பரிகாரம் செய்ய வேண்டிய பக்தர்கள் அதற்கான தொகையை கோயில் நிர்வாகத்தில் செலுத்தி ரசீதை பெற்றுக்கொள்ளலாம். அதற்கான பிரசாதம் அஞ்சல் மூலம் மட்டுமே அனுப்பி வைக்கப்படும் என கோயில் செயல் அலுவலர் மா.தனலட்சுமி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE