திருவண்ணாமலை மாவட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் நேற்று பள்ளிக்கு மகிழ்ச்சியுடன் வந்தனர்.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் தொடங்கியபோது, பள்ளிகளுக்கு கடந்த 16-03-2020-ம் தேதி முதல் 31-03-2020-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின்னர், தொற்று பரவல் தீவிரமடைந்ததும், அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருவதால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டன.
பின்னர் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான வகுப்புகள் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கியது. இதற்காக பள்ளிகள் திறக்கப்பட்டபோது, கரோனா தொற்றால் சில மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இருப்பினும், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் அரசு இயந்திரம் செயல்பட்டதால், பள்ளிகள் தடையின்றி இயங்குகிறது.
இதன்எதிரொலியாக, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கு மாணவ, மாணவிகளுக்கான நேரடி வகுப்புகளை தொடங்க வேண்டும் என பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் வலியுறுத்தினர். அதன்படி, கரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி நவம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நேற்று வகுப்புகள் தொடங்கின. ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு, பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் மகிழ்வுடன் வரவேற்றனர். மேலும் புதிதாக பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு(1-ம் வகுப்பு) மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி தடபுடலாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் புதூர் ஊராட்சி ஒன்றிய மாதிரி தொடக்கப் பள்ளியில், மாணவ, மாணவிகளுக்கு மாலை அணிவித்து ஆட்சியர் பா.முருகேஷ் வரவேற்றார். அப்போது அவர், பள்ளியில் கரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். அப்போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா, கோட்டாட்சியர் வெற்றிவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, “அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும். மாணவர்களின் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்படுகிறது. காய்ச்சல் அறிகுறி இருந்தால், மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவர். பள்ளிக்குள் நுழையும்போது, கிருமி நாசினி கொண்டு கைகள் சுத்தம் செய்யப்படுகிறது. மதிய உணவு இடைவெளியின் போது, உணவு பொருட்களை பகிரிந்து கொள்ள அனுமதிக்கவில்லை. ஒரு பென்ச்-ல் 2 மாணவர்கள் மட்டும் அமர வைக்கப்படுகின்றனர்” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago