விருதுநகர் மாவட்டத்தில் 33 சிறு கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடைபெற்றது குறித்து விசாரணை நடத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூரைச் சேர்ந்த சிவா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
விருதுநகர் மாவட்டத்தில் 33 குவாரிகளுக்கு மாவட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தால் அனுமதி வழங்கப் பட்டுள்ளது. இந்த குவாரிகளுக்கு அனுமதி வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. இந்த மாவட்டத்தில் குவாரிகளுக்கு அனுமதி வழங்கும் நிபுணர் குழுவின் செயல்பாடு 2018-ல் நிறுத்தி வைக்கப்பட்டது.
இருப்பினும் 33 குவாரிகளுக்கு முன்தேதியிட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, சட்டவிரோதமாக குவாரிகளுக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழு தலைவர், கனிமவளத் துறை இணை இயக்குநர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிச. 5-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago