மதுரையில் கலைஞர் நூலகம் அமையும் இடத்தை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்றுமுன்தினம் மதுரை வந்தார். அவர் மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மதுரையில் தொண்டி சுற்றுச்சாலை சந்திப்பு பல்வழிச்சாலை மேம்பாலப் பணியை பார்வையிட்டார்.
குருவிக்காரன் சாலை மேம்பாலப் பணி, வைகை கரையில் அமைக்கப்படும் பூங்கா பணிகளையும் அவர் பார்த்தார். தொடர்ந்து வைகை கரையில் மரக்கன்று நட்டார்.
பின்னர் மதுரை புதுநத்தம் சாலையில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலக வளாகத்தில் ரூ.99 கோடியில் கலைஞர் நூலகம் அமையும் இடத்தைப் பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியின்போது மதுரை அரசு மருத்துவக் கல்லூரி இளங்கலை துணை மருத்துவ மாணவர்கள் அவரை சந்தித்து மனு வழங்கினர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 75-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இளங்கலை துணை மருத்துவப் படிப்பு படிக்கிறோம். நாங்கள் கல்லூரியில் தங்கி படிப்பதற்கு விடுதி மற்றும் உணவு வசதிகள் இல்லாததால் தனியார் விடுதிகளில் தங்கிப் படிக்க வேண்டிய நிலை உள்ளது. ஏழை, எளிய மாணவர்களால் தனியார் விடுதிகளில் தங்கிப் படிக்க முடியவில்லை. போதுமான வசதி, பாதுகாப்பும் அங்கு இல்லை.
மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம். ஒரு ஆண்டுக்குள் கோரிக்கையை நிறைவேற்றுவதாகக் கூறியிருந்தார். இரண்டரை ஆண்டாகியும் இன்னும் இக்கோரிக்கை தொடர்பாக எந்த தகவலும் இல்லை. எங்களுக்கு அரசு விடுதி மற்றும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு அதிகபட்ச உதவித் தொகை கிடைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
மனுவைப் பெற்ற ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பதாக மாணவர்களுக்கு உறுதியளித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago