கிருஷ்ணகிரியில் நிலக்கடலை அறுவடை தீவிரம் :

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலக்கடலை அறுவடை செய்யும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி வட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் நிலக்கடலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். மானாவாரி பயிரான நிலக்கடலை 14 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது.

நிகழாண்டில் கரீப் பருவத்திற்கு ஏற்ற மழை பொழிவு இருந்ததால், வழக்கத்தை விட விவசாயிகள் நிலக்கடலை அதிகளவில் பயிரிட்டனர். ஜூன், ஜூலை மாதம் விதைக்கப்பட்ட நிலக்கடலை, அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தற்போது ​தொடர்ந்து பெய்த மழையாலும், காட்டுப்பன்றிகள் தொல்லையால் நிலக்கடலை விளைச்சல் சற்று பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி பகுதி விவசாயிகள் கூறும்போது, ஒவ்வொரு ஆண்டும் 25 ஆயிரம் முதல் 45 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. நிகழாண்டில் நல்ல மழை பொழிவு இருந்ததால் விளைச்சல் அதிகரித்து காணப்பட்டது. செடிகளில் காய்கள் நன்கு காய்த்தும் இருந்தன. தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டன. செடிகளில் உள்ள நிலக்கடலை கொட்டைகளில் துளிர் வந்துள்ளது. இதே போல், காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. காடுகளை ஒட்டியுள்ள நிலங்களில் பயிரிடப்பட்ட நிலக்கடலை செடிகளை காட்டுப்பன்றிகள் அதிகளவில் சேதப்படுத்தி உள்ளன. இதன் காரணமாக விளைச்சல் அதிகமாக இருந்தும் சிறியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், நிலக்கடலை அறுவடை பணிக்கு ஆட்கள் பற்றாக்குறையும் உள்ளது. அறுவடை செய்யப்பட்ட நிலக்கடலைகள் உலர்த்தப்பட்டு, சந்தைகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்ல உள்ளதாக தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்