தீபாவளியை முன்னிட்டு செட்டிநாடுப் பலகாரங்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.
சிவகங்கை மாவட்டத்தில் நகரத்தார் வாழும் காரைக்குடி, நாட்டரசன்கோட்டை, தேவ கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தயாராகும் செட்டிநாடு பலகாரங் களுக்கு தனி மவுசு உண்டு. இதில் நாட்டரசன்கோட்டையில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் செட்டிநாடு பலகாரங்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாராகும் முறுக்கு மொறுமொறுப்பாகவும், ருசியாகவும் இருக்கும். அதேபோல் அதிரசமும் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும். ஒருமுறை பாக்கெட் செய்தால் 3 மாதங்கள் வரை கெடாது. இதற்கு சேர்மானப் பொருட்கள் மற்றும் அதன் தரமும், கை பக்குவமும்தான் காரணம் என்கின்றனர். மேலும் இங்கு மண் அடுப்பில்தான் முறுக்கு, அதிரசம் சுடுகின்றனர். இதனால் சுவையும், மணமும் மாறாது என்கின்றனர்.
நாட்டரசன்கோட்டை முறுக்கு, அதிரசத்துக்கு தனி கிராக்கி உள்ளது. நம் நாடு மட்டுமின்றி வெளிநாடு வாழ் தமிழர்கள்கூட இங்கிருந்து முறுக்கு, அதிரசத்தை ஆர்டர் செய்து வாங்கிச் செல்கின்றனர். நவ. 4-ம் தேதி தீபாவளி என்பதால் ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.
இது குறித்து நாட்டரசன் கோட்டை தேன்மொழி கூறியதாவது: முறுக்கு சுடுவதற்கு சமையல் எண்ணெய்யை ஒருமுறை தான் பயன்படுத்துவோம். இதனால் எளிதில் கெடாது. ஒரு படி அரிசி, கால்படி உளுந்தில் 50 முறுக்குகள் வரை தயாரிக்கிறோம். முறுக்கு, அதிரசம் தலா ரூ.5-க்கு கொடுக்கிறோம். கட்டுபடியாகாத விலையால் பெரிய அளவில் லாபம் கிடைப்பதில்லை. கூலிதான் கிடைக்கும். இருந்தாலும் பாரம்பரியமாக இத்தொழிலைச் செய்து வருகிறோம். இதுதவிர தேன் குழல், கைமுறுக்கு, சீப்புச்சீடை, பாசிப்பருப்பு உருண்டை, பொடி சீடை, எள் அடை போன்றவையும் தயாரிக்கிறோம். தீபாவளிக்கு 5 நாட்களே உள்ளதால் ஆர்டர்கள் கொடுத் தோருக்கு சரக்கு அனுப்பி வருகி றோம். சிங்கப்பூர், அமெரிக்கா, துபாய், குவைத் போன்ற வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைத்துள்ளோம். பண்டிகைக்கு மட்டுமின்றி விஷேச காலங்களிலும் எங்களுக்கு ஆர்டர்கள் வரும், என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago