ஈரோடு மாநகராட்சிப் பகுதியில், கரோனா தடுப்பூசி செலுத்தாத வர்கள் குறித்து வீடு வீடாகச் சென்று கல்லூரி மாணவர்கள் கணக்கெடுத்து வருகின்றனர்.
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்றும் நாளையும் கரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. 64 தடுப்பூசி மையங்கள் மற்றும் 40 நடமாடும் வாகனங்கள் மூலம் கரோனா தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி போடாதவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, அவர்களின் வீடுகளுக்கே சென்று ஊசி போடப்படுகிறது.
முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் கணக் கெடுக்கப்பட்டு, அவர்களுக்கு இரண்டாவது தவணை ஊசி போடுவது தொடர்பாக தொலைபேசி மூலம் நினைவூட்டப்படுகிறது.
இந்நிலையில், இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் விவரங்களை சேகரிக்கும் பணியில் என்.சி.சி. மற்றும் என்.எஸ்.எஸ். பிரிவுகளில் செயல்படும் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் வீடு, வீடாகச் சென்று தடுப்பூசி போடாதவர்கள், முதல் தவணை தடுப்பூசி போட்டவர்கள் விவரம், எந்த ஊசி போட்டுள்ளனர் என்பது போன்ற விவரங்களைச் சேகரித்து வருகின்றனர்.
இதன் அடிப்படையில், அப்பகுதிகளில் கவனம் செலுத்தி தடுப்பூசி போட மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்யும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago