பயிர்க் காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என திருவாரூரில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தலைமையில், ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், நாகை எம்.பி எம்.செல்வராஜ், எம்எல்ஏக்கள் பூண்டி கே.கலைவாணன், க.மாரிமுத்து, மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், நாகை எம்.பி எம்.செல்வராஜ் பேசியபோது, “பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மின்கம்பங்கள், மின்சார கம்பிகள் சீரமைக்கப்பட வேண்டும். வங்கிக் கடன்கள் சரிவர கிடைக்கவில்லையென விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதுதொடர்பாக விவாதிக்க வங்கியாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டத்தை ஆட்சியர் கூட்ட வேண்டும்” என்றார்.
தொடர்ந்து விவசாயிகள் பேசியது:
குடவாசல் சேதுராமன்: தூர்வாரும் பணி முறையாக நடைபெறவில்லை. தொடர்ந்து பெய்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் விதைப்பு செய்த சம்பா பயிர்கள் அழுகிவிட்டன. அவற்றுக்கு பதில் மறு விதைப்பு செய்வதற்கு தேவையான விதைநெல் வழங்க வேண்டும்.
கார்த்திகேயன்: வேளாண்துறை பரிந்துரைத்த ஏடிகே 53 என்ற நெல்ரகத்தை நான்கு முறைக்கு மேல் தெளித்தும் முளைப்புத்திறன் வரவில்லை. எனவே, அதற்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்(மார்க்சிஸ்ட்) தம்புசாமி: விடுபட்ட கிராமங்களுக்கு 2020-21-ம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு தடையின்றி கடன் வழங்க வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்(இந்திய கம்யூனிஸ்ட்) மாசிலாமணி: உர தட்டுப்பாட்டை போக்க வேண்டும். ஈரப்பதத்தை காரணம் காட்டாமல், கொள்முதல் நிலையத்துக்கு வரும் அனைத்து நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும். பயிர்க் காப்பீடு திட்டத்தை அரசே முழுமையாக ஏற்று நடத்த வேண்டும்.
கொரடாச்சேரி மாரிமுத்து: தஞ்சாவூர் மாவட்டத்தில் பயிர்க் காப்பீட்டுக்கு 40 சதவீத இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், திருவாரூர் மாவட்டத்தில் 20 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டு, பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. திருக்கண்ணமங்கையில் வேளாண் விற்பனை மையம் தொடங்க வேண்டும்.
பாலகுமாரன்: குறுவை தொகுப்புத் திட்டம் வழங்கியதைப் போல சம்பா தொகுப்புத் திட்டம் வழங்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
தொடர்ந்து, ஆட்சியர் பேசியபோது, “மின்கம்பங்கள், மின்கம்பிகளை முறையாக சீரமைத்து, பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும், விதைநெல் மற்றும் உளுந்து தேவையான அளவு இருப்பு உள்ளது. விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago