காதலிக்க மறுத்த ஆசிரியையை கொன்ற வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை :

By செய்திப்பிரிவு

பெரம்பலூரில் காதலிக்க மறுத்த ஆசிரியையை கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பெரம்பலூர் மகளிர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

பெரம்பலூர் நான்கு ரோடு மாலா நகரைச் சேர்ந்தவர் சேட்டு மகள் கமருனிஷா(31). இவர், குன்னம் அருகேயுள்ள எலந்தங்குழி அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவரை பெரம்பலூர் பாரதிதாசன் நகரைச் சேர்ந்த செல்லமுத்து மகன் ஆனந்த்(36) என்பவர் ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததுடன், தன்னை காதலிக்கச் சொல்லி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், அவரை காதலிக்க கமருனிஷா மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த ஆனந்த், தனது நண்பரான பெரம்பலூர் எடத்தெருவைச் சேர்ந்த ராஜ் மகன் அரவிந்த்(25) என்பவருடன் சேர்ந்து, 14.8.2018 அன்று இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த கமருன்னிஷாவை தொண்டபாடி என்ற பகுதியில் வழிமறித்து, கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து கமருன்னிஷாவின் அண்ணன் காஜாமொய்தீன் அளித்த புகாரின்பேரில் குன்னம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஆனந்த், அரவிந்த் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர், இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

பெரம்பலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், ஆனந்த், அரவிந்த் ஆகிய இருவருக்கும் கொலை வழக்கு, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் தலா ஒரு ஆயுள் தண்டனை விதித்து, அவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி கிரி தீர்ப்பளித்தார். மேலும், இருவருக்கும் தலா ரூ.57,500 அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து, இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்