திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை நீடித்தது. பலத்த மழை காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. பாளையங்கோட்டையில் மின்னல் தாக்கியதில் 10 வீடுகளில் மின் சாதனப் பொருட்கள் சேதமாயின.
பாளையங்கோட்டை கேடிசி நகரை அடுத்த ஜான்சிராணி நகரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் மின்னலுடன் மழை பெய்தது. அங்குள்ள சுதாகர் என்பவரது வீட்டில் மின்னல் தாக்கியது. இதில் அவரது வீட்டிலிருந்த டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்கள் சேதமடைந்தன. இதுபோல் அருகிலுள்ள 10-க்கும் மேற்பட்டோரின் வீடுகளின் மின்வயர்கள் கருகியதுடன், மின்சாதன பொருட்களும் நாச மாயின. மின்வாரிய அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இரு மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் நேற்று இடி, மின்ன லுடன் மழை பெய்தது. ராதாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பிற்பகலில் பலத்த மழை பெய்தது. திருநெல்வேலி, பாளையங்கோட்டை பகுதிகளில் பெய்துவரும் மழையால் தாழ்வான இடங்கள், சாலையோரங்களில் தண்ணீர் தேங்கியிருக்கிறது.
இரு மாவட்டங்களிலும் அணைப்பகுதிகள், பிறஇடங்களில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழையளவு (மி.மீட்டரில்):
பாபநாசம்- 5, சேர்வலாறு- 4 , மணிமுத்தாறு- 10.4 , அம்பா சமுத்திரம்- 11.2, சேரன்மகாதேவி- 10, ராதாபுரம்- 3 , நாங்குநேரி- 5, களக்காடு- 5.6, மூலக்கரைப்பட்டி- 8, பாளையங்கோட்டை- 11, திருநெல்வேலி- 5.6, கடனா- 5 , ராமா நதி - 13, கருப்பாநதி- 37, குண்டாறு- 5, அடவிநயினார்- 26, ஆய்க்குடி- 14, செங்கோட்டை- 3 , தென்காசி- 57.8, சங்கரன்கோவில்- 7 , சிவகிரி- 27.
பாபநாசம் அணைக்கு விநாடி க்கு 981 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 1,405 கனஅடி தண்ணீர் தாமிரபரணியில் திறந்து விடப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் 135.25 அடியாக இருந்தது. மற்ற அணைகளின் நீர்மட்டம் (அடைப்புக்குள் உச்சநீர்மட்டம்):
மணிமுத்தாறு- 79.25 அடி ( 118 அடி), வடக்கு பச்சையாறு- 16.65 (50), நம்பியாறு- 10.23 (22.96), கடனா- 82.20 (85), ராம நதி- 73 (84) , கருப்பா நதி - 68.57 (72), குண்டாறு- 36.10 (36.10), அடவிநயினார்- 126.25 (132.22).
கனமழை காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்ததை அடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும்பாலான நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago