தி.மலை மாவட்டத்தில் கோயில் சொத்துக்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஆட்சியர் பா.முருகேஷிடம் திருத்தொண்டர்கள் சபை வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோயில் மற்றும் நீர்நிலை சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷிடம், திருத் தொண்டர்கள் சபையின் நிறுவனத் தலைவர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து ஆட்சியர் பா.முருகேஷை சந்தித்து, அவர் அளித்துள்ள மனுவில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோயில்கள், பொது மற்றும் நீர்நிலை சொத்துக்களை கண்டறிந்து மீட்க வேண்டும். அனுமதியற்ற மற்றும் சட்ட விரோத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை பாதுகாப்பு, ஒலி மாசில்லா மற்றும் பசுமையான தி.மலையை முன்னெடுத்து செல்ல வேண்டும். இது தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் கூட்டாய்வு மேற்கொண்டு முறையான மற்றும் முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

பின்னர் அவர், செய்தி யாளர்களிடம் கூறும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ள அனைத்து இடங்களையும் மீட்க வேண்டும் என ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மனு அளிக்க உள்ளோம்.

தி.மலையில் உள்ள குகை நமச்சிவாயருக்கு சொந்தமான இடங்களில் முழுவதும் நில அளவை செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புதாரர்களுக்கு நகராட்சி மூலமாக ஏற்கெனவே அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் வலியுறுத்தப் பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். கோயில் சொத்துக்களை மீட்பது குறித்து உயர் நீதிமன்ற உத்தரவுபடி நடவடிக்கை எடுத்தால், ஒரு சதுரடி கூட ஆக்கிரமிப்பு என்பது இருக்காது. அனைத்து துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்பு இல்லாததுதான், மீட்புப் பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதில், முன்னோடி மாவட்டமாக தி.மலையை கொண்டு வருவதற்காக மனு அளிக்கப்பட்டுள்ளது.

தி.மலை மற்றும் கிரிவலப் பாதையைச் சுற்றி 356 குளங்கள் இருந்தன. அதில், பெரும்பாலான குளங்கள் காணப்படவில்லை. அனைத்து குளங்களும் மீட்கப்படும். போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்தவர்கள், அதனை பதிவு செய்தவர்கள் உட்பட அனைவரது மீதும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப் படும். ” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்