ராணிப்பேட்டை காவலர் குடியிருப்பில் - குடிநீர் பிரச்சினைக்கு ஒரு வாரத்தில் தீர்வு : அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆர்.காந்தி உத்தரவு

By செய்திப்பிரிவு

ராணிப்பேட்டையில் உள்ள காவலர் குடியிருப்பில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு ஒரு வாரத்தில் தீர்வு காண வேண்டும் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி உத்தரவிட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு காவலர் குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்கு, 75-க்கும் மேற்பட்ட குடியிருப்பு களில் காவலர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். காவலர் குடியிருப்புக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் இணைப்பு இல்லை என்றும் ஆழ்துளை கிணற்றின் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வந்த தண்ணீரும் வருவதில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், தெருவிளக்கு வசதியும் இல்லை என்பதால் இரவு நேரங்களில் நடந்து செல்ல காவலர் குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர்.

இது தொடர்பான புகாரின் பேரில், காவலர் குடியிருப்பில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபா சத்யன் ஆகியோருடன் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தண்ணீர் பிரச்சினை குறித்து காவலர் குடும்பத்தினர்களிடம் விசாரித்த அமைச்சர் ஆர்.காந்தி, தமிழ்நாடு காவலர் குடியிருப்பு வீட்டுவசதி வாரிய அதிகாரிகளிடம் விசாரித்தார். அதில், காவலர் குடியிருப்புக்கு நகராட்சி குடிநீர் இணைப்புக்கு இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்றும் ஆழ்துளை கிணற்றின் நீர்மட்டம் கீழே சென்றதால் குடிநீர் வழங்க முடியவில்லை என தெரிவித்தனர்.

இதையடுத்து, ஆழ்துளை கிணற்றை ஆழப்படுத்தி குடிநீர் விநியோகம் செய்யவும், தெருவிளக்கு பிரச்சினையை உடனடியாக சரி செய்வதுடன் நகராட்சியின் காவிரி கூட்டுக் குடிநீர் இணைப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒரு வாரத்துக்குள் பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, காவலர் குடியிருப்பு சிறுவர்கள் விளையாடுவதற்காக அருகில் உள்ள மைதானத்தை சீர் செய்யவும் அங்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்தவும் அமைச்சர் ஆர்.காந்தி உத்தர விட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்