நீலகிரி மாவட்டத்தில் புதிய தொழில் பூங்கா அமைப்பதன் மூலம் 3,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது என வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் மாபெரும் வாடிக்கையாளர் தொடர்பு முகாம் நடந்தது. வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் முகாமை தொடங்கி வைத்து 2,732 பயனாளிகளுக்கு ரூ.160.74 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு கடனுதவிகளை வழங்கி பேசியதாவது:
முதல்வர், தொழில்துறை மேம்பாட்டுக்காக தொழில் வளர்ச்சியில் பல்வேறு சீர்மிகு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்ற நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வருகிறார்.
நீலகிரி மாவட்டத்தை தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் அடையச் செய்ய, தட்பவெட்ப நிலைக்கு ஏற்றவாறு புதிய தொழில் நிறுவனங்களை கொண்டு வரவும், புதிய தொழில் பூங்கா கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தொழில் பூங்கா அமைப்பதன் மூலம் 3,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.
2021 -2022 ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் 590 சுய உதவிக்குழுக்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் 1679 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.87.72 கோடி வங்கிகடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இக்கடன் பெற்றுள்ள சுய உதவிக்குழுக்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
மேலும், தாட்கோ மூலம் ரூ.17.54 லட்சம் மதிப்பிலான 2 வாகனங்களை பயனாளிகளுக்கு வழங்கினார். அதனை தொடர்ந்து வாடிக்கையாளர் தொடர்பு முகாமில் வங்கிகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த 15 அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார்.
முகாமில், கூடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பொன் ஜெயசீலன், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் ஜாகீர் உசேன், கனரா வங்கி முதன்மை பொது மேலாளர் பழனிச்சாமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்தியராஜா, தாட்கோ மேலாளர் ரவிசந்திரன், அனைத்து வங்கி மேலாளர்கள், அரசுத்துறை அலுவலர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago