தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் : தூய்மை பணியாளர் நியமிக்க வேண்டும் : தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில், தூய்மைப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, மாநகராட்சி ஆணையரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடியிடம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருப்பூர் தெற்கு கிளை சார்பில் திருப்பூர் மாநகரத் தலைவர் பிரேமா, மாநகர செயலாளர் தினேஷ், மாநகர பொருளாளர் சங்கர் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜா ஆகியோர் அளித்த மனு:

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஏற்கனவே மாநகராட்சி அலுவலகத்தின் மூலமாக தொகுப்பூதிய அடிப்படையில் துப்புரவுத் தொழிலாளர்கள் நியமனம் செய்யப்பட்டு, பள்ளி வளாகம் மற்றும் கழிவறை தூய்மைப் பணியை மேற்கொண்டு வந்தனர். கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 19 மாதங்களாக பள்ளிகளில் மாணவர்கள் வருகை இல்லாத காரணத்தினால், அவர்கள் பள்ளிக்கு வருவதை நிறுத்திவிட்டனர்.

தற்போது கரோனா தாக்கம் குறைவைக் கருத்தில்கொண்டு, தமிழக அரசு வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளதால், பள்ளி வளாகம் முழுவதும் இரண்டு வேளை தூய்மை செய்யவும், வகுப்பறை முழுவதும் இருவேளை கிருமி நாசினி தெளித்து கழிவறை தூய்மை செய்யவும் வேண்டி உள்ளதால், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தூய்மை பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். தேவையான கிருமிநாசினி பொருட்களை வழங்க வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE