கே.பி.சுந்தராம்பாள் பிறந்தநாள் விழா கொடுமுடியில் சிலை அமைக்கக் கோரிக்கை :

By செய்திப்பிரிவு

தேசப்பற்றும், இறைபக்தியும் கொண்ட புகழ்பெற்ற நடிகையும், பாடகியுமான கே.பி.சுந்தராம்பாளுக்கு, கொடுமுடியில் சிலை வைக்க வேண்டும் என அவரது பிறந்தநாளில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

கொடுமுடி கோகிலம் என்று போற்றப்படும் கே.பி.சுந்தராம்பாளின் 113-வது பிறந்தநாள், நடிகர் சிவகுமார் பிறந்தநாள் மற்றும் மாரிமுத்து, துரைச்சாமி நினைவு அறக்கட்டளை ஆண்டு விழா கொடுமுடியில் நேற்று நடந்தது. விழாவிற்கு முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி தலைமை தாங்கிப் பேசும்போது, திரையுலகில் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் பெறக்கூடிய அளவில், மிக உயர்ந்த இடத்தில் கே.பி.சுந்தராம்பாள் புகழ்பெற்று இருந்தார். அவரது நினைவைப் போற்றும் வகையில் சிலை அமைக்க வேண்டும், என்றார்.

மொடக்குறிச்சி பாஜக எம்.எல்.ஏ. சி.சரஸ்வதி பேசும்போது, கதர் இயக்கம், தீண்டாமை ஒழிப்பு பாடல்களைப் பாடி தேசபக்தியையும், புகழ்பெற்ற முருகன் பாடல்களைப் பாடி இறைபக்தியையும் கே.பி.சுந்தராம்பாள் வளர்த்துள்ளார். தமிழகத்தில் சட்டமேலவையின் முதல் பெண் உறுப்பினராக பதவி வகித்துள்ளார். மிகச்சிறந்த ஆன்மீகவாதியாக விளங்கிய அவரின் மறைவின் போது, நடிகர் சங்கத்திற்கு அவரது உடலை எடுத்துவரச்செய்து எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகிய இருவரும் அஞ்சலி செய்த வரலாற்றுச் சிறப்பு பெற்றவர், என்றார்.

விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கொடுமுடி கோகிலம் பத்ம கே.பி.சுந்தராம்பாள் அம்மையார் தமிழிசை பேரவை மற்றும் அறக்கட்டளை நிர்வாகத்தினர் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்து இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்