கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ், தொழிலாளிக்கு குரல் நாணில் இருந்து கட்டி அகற்றப்பட்டது.
இதுதொடர்பாக அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் அசோகன் கூறியதாவது:
கிருஷ்ணகிரி பாரதி நகரைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (29). பெயிண்டர். இவருக்கு திருமணமாகி, மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அவரது குரல் மாற்றம் அதிகரித்துக்கொண்டே சென்றதால், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காது, மூக்கு மற்றும் தொண்டை பிரிவில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்து பார்த்ததில், அவருடைய வலது பக்க குரல் நாணில் (தொண்டையில் உள்ள மெல்லிய சதை தொகுப்பு) சிறிய கட்டி இருந்தது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலமும் அதிநவீன எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை கருவிகளை கொண்டு ஜெகநாதனுக்கு அறுவை சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்துகாது, மூக்கு மற்றும் தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்கள் சபரீஷ், சுஜய்குமார், ஜனார்தனம், தினேஷ், வினோத்குமார், மயக்கவியல் மருத்துவர்களான நந்தபிரபு, சுபா, ராமநாதன், இளம்பருதி, விஜயரூபா ஆகியோர் கொண்ட குழுவினர் உதவியுடன் ஜெகநாதனுக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு, வெற்றிகரமாக கட்டி அகற்றப்பட்டது. இச்சிகிச்சைக்குப் பின்னர் அவருடைய பழையகுரல் திரும்ப பெறப்பட்டது.
இந்த அறுவை சிகிச்சையை வெளியிடங்களில் செய்தால் ரூ.60 ஆயிரத்திற்கும் மேல் செலவாகும். ஆனால் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக, தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் செய்து முடிக்கப்பட்டுள்ளது என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago