குப்பையை அகற்றாமல் அலட்சியம் - வந்தவாசியில் பொதுமக்கள் போராட்டம் :

By செய்திப்பிரிவு

குப்பையை அகற்றாமல் அலட்சியமாக செயல்பட்டதால் வந்தவாசி நகராட்சி அலுவலகம் உள்ளே குப்பையை கொட்டி பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சி 11-வது வார்டுக்கு உட்பட்ட மக்தும் மரைக்காயர் தெரு மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் குப்பை அகற்றபடாமல் உள்ளது. மேலும், கழிவுநீர் கால்வாயும் தூர்வாராமல் உள்ளது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் பலனில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், தங்கள் பகுதியில் தேங்கிய குப்பையை, சாக்குப்பையில் அள்ளிவந்து நகராட்சி அலு வலகம் உள்ளே நேற்று கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறும்போது, “எங்கள் பகுதியில் கடந்த 10 நாட்களாக குப்பை அகற்றப்படவில்லை. கழிவுநீர் கால்வாயும் தூர்வாராமல் உள்ளனர். இதனால் சுகாதாரச்சீர்கேடு ஏற்பட்டு அவதிப் படுகிறோம். எங்கள் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர்.

எங்களது வேதனையை நகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு உணர்த்துவதற்காகவே, நகராட்சி அலுவலகத்தில் குப்பையை கொட்டி உள்ளோம்“ என்றனர்.

இதையடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நகராட்சி ஆணையாளர் ராமஜெயம், குப்பையை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் புறப்பட்டு சென்றனர். இதைத் தொடர்ந்து அலுவலகம் உள்ளே கொட்டப்பட்ட குப்பையை நகராட்சி ஊழியர்கள் அகற்றி தூய்மைப்படுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்