இந்து சமய அறநிலையத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல் :

தஞ்சாவூர்: தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தஞ்சாவூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவர் தெ.வாசுகி தலைமை வகித்தார். மண்டலச் செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் மாரியம்மாள், பொதுச் செயலாளர் சி.சு.பால்ராஜ், பொருளாளர் வெ.பாலமுருகன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.கோதண்டபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் அடிப்படை பணியாளர்கள் முதல் ஆய்வாளர்கள், கண்காணிப்பாளர்கள் வரை 50 சதவீதத்துக்கும் மேல் காலிப் பணியிடங்கள் உள்ளன. இளநிலை உதவியாளர், உதவியாளர் மற்றும் தட்டச்சர் ஆகிய காலிப் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் தனியாக அறிவிப்பு வெளியிட்டு, பணி நியமனம் செய்ய வேண்டும்.

100 கோயில்களுக்கு ஒரு களப்பணி ஆய்வாளர் பணியிடம் என 44 ஆயிரம் கோயில்களுக்கு 440 களப்பணி ஆய்வாளர் பணியிடங்கள் தேவையாக உள்ளன. எனவே, கூடுதலாக 100 ஆய்வாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை புதிதாக உருவாக்க வேண்டும்.

ஒரு உதவி ஆணையர் அலுவலகத்துக்கு 3 இளநிலை உதவியாளர்கள் வீதம் 108 புதிய பணியிடங்கள் மற்றும் இணை ஆணையர் அலுவலகங்களுக்கு 4 இளநிலை உதவியாளர்கள் வீதம் 80 புதிய பணியிடங்கள் என மொத்தம் 188 இளநிலை உதவியாளர் பணியிடங்களை கூடுதலாக உருவாக்க வேண்டும். விடுமுறை நாட்களிலும், அலுவலக வேலை நேரத்துக்கு அப்பாற்பட்டு சீராய்வு கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும். பெண் ஊழியர்களை இரவு 10 மணிக்குமேல் பணிபுரியச் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்