கிராம நிர்வாக அலுவலரின் முயற்சியால் - வல்லம்புதூரில் ஒரே நேரத்தில் 87 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கல் :

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் அருகே 25 ஆண்டுகளுக்கு மேலாக இலவச வீட்டுமனைப் பட்டா கிடைக்காமல் தவித்த கிராம மக்கள் 87 பேருக்கு கிராம நிர்வாக அலுவலரின் முயற்சியால் நேற்று வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(47). கடற்படையில் 20 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றார். பின்னர், 2015-ம் ஆண்டு தஞ்சாவூர் விளார் ஊராட்சியில் விஏஓவாக பணியில் சேர்ந்தார். அப்போது, நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கினார். தொடர்ந்து, 2018-ம் ஆண்டு வல்லம்புதூர் ஊராட்சிக்கு மாறுதலாகி பணியாற்றி வந்த இவர், 15 நாட்களுக்கு முன்பு செல்லம்பட்டி ஊராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

முன்னதாக, வல்லம்புதூர் ஊராட்சிக்குட்பட்ட வல்லம்புதூர், முன்னையம்பட்டி, குருவாடிப்பட்டி என 3 கிராம மக்களுக்கு தேவை யான சான்றிதழ்கள், முதியோர் உதவித் தொகை உள்ளிட்டவற்றை அலைக்கழிப்பு செய்யாமல் வழங்கி வந்தார்.

மேலும், கஜா புயல், கரோனா ஊரடங்கு காலங்களில், பொதுமக்களுக்கு சொந்த செலவில் நிவாரணப் பொருட் களை வழங்கினார். இதனால், செந்தில்குமார் மீது அதிக மரியாதை கொண்டிருந்த கிராம மக்கள், சில மாதங்களுக்கு முன்பு அவரது பிறந்தநாளை விழாவாக கொண்டாடினர். மேலும், அவரை இடமாற்றம் செய்யக் கூடாது என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனாலும், இடமாற்றம் செய்யப் பட்டார்.

இந்நிலையில், வல்லம்புதூர் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக இலவச வீட்டுமனைப் பட்டா இல்லாமல் தவித்துவந்த மக்களுக்கு, செல்வகுமார் கடந்த ஓராண்டாக பல்வேறு முயற்சிகளை செய்து, தற்போது 87 பேருக்கு பட்டா கிடைக்க ஏற்பாடு செய்தார். அதன்படி, வல்லம்புதூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.42 லட்சம் மதிப்புள்ள 87 வீட்டுமனை பட்டாக்களை பயனாளிகளுக்கு எம்.பி எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம் ஆகியோர் வழங்கினர்.

வேறு கிராமத்துக்கு மாறுத லாகிச் சென்றாலும், தான் முன்பே உறுதியளித்தபடி இலவச வீட்டு மனை பட்டாக்களை பெற்றுக் கொடுத்த செந்தில்குமாரை பயனா ளிகள் சந்தித்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்