கறவை மாடுகளுக்கு தாது உப்புகளின் முக்கியத்துவம் பற்றி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலைய கால்நடை மருத்துவ அறிவியல் உதவி பேராசிரியர் ப.சித்ரா, திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜலிங்கம் ஆகியோர் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் 2.50 லட்சம் கலப்பின கறவை மாடுகள் பால் உற்பத்திக்காக வளர்க்கப்பட்டு வருகின்றன. அதிக பால் உற்பத்தி செய்யும் கலப்பின கறவை மாடுகளில், தாது உப்புகளின் பற்றாக்குறையால் கன்று ஈன்ற 24 - 48 மணி நேரத்தில் பால் காய்ச்சல் (சத்து குறைபாடு) ஏற்பட்டு, பால் உற்பத்தி குறைவு, சினைபிடித்தல் பாதிப்பு, மாடுகள் பருவமடைதலில் குறைபாடு போன்ற பல்வேறு வகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன.
மாடுகளின் உடலில் தாது உப்புகளை இயற்கையாக உற்பத்திசெய்ய முடியாது. மாடுகள் உட்கொள்ளும் தீவனங்களில் இருந்தேஅவற்றுக்கு தேவையான தாது உப்புகள் கிடைக்கின்றன. மாடுகளின் உடல் வளர்ச்சிக்கு கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், சோடியம், குளோரின், பொட்டாசியம், சல்பர் போன்ற சத்துகள், அதிக அளவில் தேவைப்படும் பேரூட்ட தாதுக்கள் ஆகும். இரும்பு, கோபால்ட், தாமிரம், மேங்கனீசு, துத்தநாகம், அயோடின், செலினியம், மாலிப்டினம், குரோமியம், புளுரின், சிலிகான், நிக்கல், போரான், காரீயம், லித்தியம் ஆர்செனிக் போன்றவை குறைந்த அளவில் தேவைப்படும் நுண்ணூட்டத் தாதுக்கள் ஆகும்.
கறவை மாடுகளுக்கு கலப்புத் தீவனம் கொடுக்காமல் மக்காச்சோளம், அரிசி, தவிடு, புண்ணாக்குஆகியவற்றை தீவனமாக கொடுக்கலாம். தினமும் 30 முதல் 50 கிராம் வரை தாது உப்புக்கலவை கொடுக்க வேண்டும். இதனுடன் 25 முதல் 30 கிராம் சாப்பாட்டு உப்பையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும். இதனால் கறவை மாடுகளின் உற்பத்தித் திறன் மற்றும்இனப்பெருக்கத் திறன் அதிகரிப்பதோடு கன்று ஈன்ற மாடுகளில்ஏற்படும் பால் காய்ச்சல் பாதிப்பையும் கட்டுப்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தை 04255- 296644, 296155 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago