வாடிக்கையாளர்களிடம் மாநில மொழிகளில் பேசுவதை - ‘சொமாட்டோ’ போன்ற நிறுவனங்கள் கட்டாயமாக்க வேண்டும் : திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்

வாடிக்கையாளர்களிடம் மாநில மொழிகளில் பேசுவதை ‘சொமாட்டோ' போன்ற நிறுவனங்கள் கட்டாயமாக்க வேண்டும் என்று திமுக மகளிரணிச் செயலாளரும், அக்கட்சியின் நாடாளுமன்ற குழுதுணைத் தலைவருமான கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

'சொமாட்டோ' செயலி மூலம் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், நேற்று முன்தினம் உணவு ஆர்டர் செய்திருந்தார். அவருக்கு வந்த உணவு முழுமையாக இல்லாமல் குறைவாக இருந்ததால், அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தின் இணைய தளத்தின் குறைகளைச் சொல்லும் பகுதியில் புகார் தெரிவித்துள்ளார்.

அதற்கு ‘சொமாட்டோ' நிறுவன ஊழியர் இந்தி மொழியில் பதிலளித்துள்ளார். அதற்கு தமிழகவாடிக்கையாளர் எதிர்ப்பு தெரிவிக்க, ‘இந்தி நமது தேசிய மொழி. எனவே அனைவரும் அதைச் சிறிதளவு தெரிந்துகொள்ள வேண்டும்’ என்று அந்நிறுவன ஊழியர் பதில் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், இதுதொடர்பாக தமிழில் விளக்கம் அளித்துள்ள ‘சொமாட்டோ' நிறுவனம், "எங்கள் வாடிக்கையாளர் சேவை முகவரின் நடத்தைக்கு வருந்துகிறோம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் தேசத்தின் மாறுபட்ட கலாச்சாரத்தின் மீதான எதிர் கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய ஊழியரைப் பணி நீக்கம் செய்துள்ளோம். மக்களின் உணர்வுகளுக்கு எதிராகக் கருத்தைப் பகிரக் கூடாது எனத் தெளிவாக நாங்கள் எங்கள் முகவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி அளிக்கிறோம். இந்த வாடிக்கையாளர் சேவை முகவரின் அறிக்கைகள் மொழி அல்லது சகிப்புத் தன்மை குறித்த நிறுவனத்தின் நிலைப்பாட்டைக் குறிக்கவில்லை. உணவு மற்றும்மொழி ஒவ்வொரு மாநிலத்தின், கலாச்சாரத்தின் 2 அடித்தளங்கள்என்பதை நாங்கள் புரிந்துள்ளோம்"என்று தெரிவித்துள்ளது.

'சொமாட்டோ' ஊழியரின் செயலுக்கு நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவர் கனிமொழி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார், இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “குறிப்பிட்ட மொழிகளில் மட்டுமேசில நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை செயல்பட்டு வருகின்றன. நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் மாநில மொழியில் பேசுவதைக் கட்டாயமாக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு இந்தி அல்லது ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. யார் இந்தியர்கள் என்று தமிழர்களுக்கு யாரும் பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE