‘‘சிவகங்கை மாவட்டத்தில் தகுதி இல்லாத பள்ளி வாகனங்களை இயக்கினால் பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என மாவட்ட ஆட்சியர் பி.மது சூதன்ரெட்டி எச்சரித்துள்ளார்.
பள்ளிகள் நவம்பர் 1-ம் தேதி முதல் திறக்கப்படுகின்றன. இதையடுத்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மைதானத்தில் தனியார் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தலைமையில் முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன், வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாணகுமார், கூடுதல் எஸ்பி பாஸ்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வுசெய்தனர்.
முதற்கட்டமாக 100 வாகனங் களின் தரம் சரிபார்க்கப்பட்டது. வாகன ஓட்டுநர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் கண் பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பார்க்கப்பட்டது.
அதன்பிறகு மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சிவகங்கை மாவட்டத்தில் 425 பள்ளி வாகனங்கள் உள்ளன. அரசு விதிமுறைகளின்படி முதலுதவிப் பெட்டி, தீயணைப்புக் கருவி இருக்கிறதா? வாகனங்களின் இயக்கம், பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது.
தகுதி இல்லாமல் பள்ளி வாகனங்களை இயக்கினால் பள்ளி நிர்வாகத்தின் மீதும், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டினால் ஓட்டுநர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago