வனத்தில் இளைஞர் கொலை தந்தை, மகன் கைது :

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே அரூர்-தும்பல் சாலையில் இருந்து பிரிந்து சேலூர் செல்லும் சாலையை ஓட்டியுள்ள காப்புக் காட்டில் இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். கடந்த 15-ம் தேதி வனக் காப்பாளர் அரவிந்த் (30) அப்பகுதியில் ரோந்து சென்றபோது கொலை சம்பவம் பற்றி அறிந்து அரூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார்.

அரூர் காவல் ஆய்வாளர் லட்சுமணதாஸ் தலைமையிலான போலீஸார் சடலத்தை மீட்டதுடன், விசாரணை மேற்கொண்டனர். இதில், கொலையானவர் சேலம் மாவட்டம் கூட்டாத்துப்பட்டியைச் சேர்ந்தவர் பாபு (எ) பாபுராஜ் (38) என்றும், அவர் மீது காரிப்பட்டி காவல் நிலையத்தில் 2 கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது.

தொடர் விசாரணையில், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் சிட்லிங் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் அவரது மகன் விக்னேஷ் (20) ஆகிய இருவரும் இக்கொலையில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. எனவே, அவர்களை கைது செய்த போலீஸார் நேற்று இருவரையும் சிறைக்கு அனுப்பினர்.

இதுபற்றி போலீஸார் கூறும்போது, ‘விஜயகுமாரின் 2-வதுமனைவி தீர்த்தம்மாள். இவரது தங்கை அமுதாவுக்கும் கொலையான பாபுவுக்கும் நட்பு இருந்துள்ளது. இதற்கிடையில், தீர்த்தம்மாளிடமும் பாபு தவறாக நடக்க முயற்சி செய்து வந்துள்ளார். இதை விஜயகுமார் கண்டித்தும் பாபுவின் தொல்லை தொடர்ந்துள்ளது. எனவே, கடந்த ஆயுத பூஜை அன்று பாபுவை விஜயகுமார் போனில் அழைத்து அரூருக்கு வரவழைத்துள்ளார். பின்னர் மது அருந்த வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது பாபுவை விஜயகுமாரும் அவரது மகனும் கொலை செய்துள்ளனர்’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE