கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை கணக்கெடுத்து இழப்பீடு வழங்க கோரிக்கை :

By செய்திப்பிரிவு

கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருவாரூரை அடுத்த மாவூர், வேப்பத்தாங்குடி, வஞ்சியூர், பின்னவாசல் உள்ளிட்ட கிராமங்களில் மழையால் சேதமடைந்துள்ள குறுவைப் பயிர்களை தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேற்று பார்வையிட்டு, விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில், பருவம் மாறி பெய்த தென்மேற்கு பருவ மழையால் காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர் நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் அழிந்துள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் குறித்து கணக்கெடுப்பு செய்து உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியை சந்திக்கும் நிலையில், விவசாயிகள் நலன் கருதி 2020-21-ம் ஆண்டு சம்பா பாதிப்புக்கு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

அதேநேரத்தில் பல கிராமங்களில் ஜீரோ பாதிப்பு என அறிவிக்கப்பட்டு, இழப்பீடு தவிர்க்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் விடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது. இதுகுறித்து ஆய்வு செய்து விடுபட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகளும் பயன்பெறும் வகையில் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்