தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் ராராமுத்திரக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட கிருஷ்ணாபுரத்தில் சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டதால், தற்போது பெய்து வரும் மழையால் சாலை சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால், கிராம மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 100 வீடுகள் உள்ளன. இந்த கிராமத்துக்கு 30 ஆண்டுகளுக்கு முன் தார் சாலை அமைக்கப்பட்டது. அந்த சாலை சேதமடைந்ததை அடுத்து, 2020-ம் ஆண்டு சாலை புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டது. அதன்படி 6 மாதத்துக்கு முன்பு 300 மீட்டர் நீளத்துக்கு தார் சாலை பெயர்த்து எடுக்கப்பட்டு, செம்மண் கிராவலால் நிரப்பப்பட்டது. அதன்பின்னர், பணிகள் மேற்கொள்ளாமல், கிடப்பில் போடப்பட்டது.
இதன்காரணமாக தற்போது பெய்து வரும் தொடர்மழையால், இந்த செம்மண் சாலை சேறும் சகதியுமாக மாறிவிட்டது. இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் இப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
சாலையில் நடந்தும். இருசக்கர வாகனத்திலும் செல்வோர் வழுக்கி விழுந்து காயமடைகின்றனர். எனவே, இந்த சாலையை உடனடியாக தார் சாலையாக மாற்றித் தர வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago