திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த குலமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (70). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுந்தரம்பாள்(68). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மாரிமுத்துவின் பக்கத்து வீட்டில் குடியிருந்த அருமைக்கண்ணு என்பவரது வீட்டுச் சுவர் இடிந்து, மாரிமுத்துவின் வீட்டின் மீது விழுந்ததால், மாரிமுத்துவின் வீட்டுச் சுவரும் இடிந்து விழுந்தது. இதில், இடிபாடுகளில் சிக்கி மாரிமுத்து, சுந்தரம்பாள் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மாரிமுத்து இறந்தார். சுந்தரம்பாளுக்கு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்த திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க.மாரிமுத்து, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுந்தரம்பாளை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், மாரிமுத்துவின் இடிந்த வீட்டை பார்வையிட்டார்.
இதுதொடர்பாக எம்எல்ஏ க.மாரிமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது: வீடு இடிந்து விழுந்து இறந்த கூலித் தொழிலாளி மாரிமுத்துவின் குடும்பத்துக்கு முதல்வரின் நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் சுந்தரம்பாளின் மருத்துவச் செலவு முழுவதையும் அரசு ஏற்க வேண்டும். மேலும், இறந்த மாரிமுத்து குடும்பத்துக்கு அரசு வீடு கட்டும் திட்டத்தின்கீழ் உடனடியாக புதிய வீடு வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருத்துறைப்பூண்டி தொகுதி முழுவதும் இதுபோன்ற சேதமடைந்த நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன.
பருவமழை காரணமாக இந்த வீடுகள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளதால், அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய கவனம் செலுத்தி கணக்கெடுப்பு நடத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு புதிய வீடுகளை கட்டித்தர முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago