ஏலகிரி மலையில் மர்மமான முறையில் குரங்குகள் உயிரிழப்பு : நோய் தொற்று உள்ளதா? என கண்டறிய மருத்துவ முகாம் நடத்த கோரிக்கை

By செய்திப்பிரிவு

ஏலகிரி மலையில் மர்மமான முறையில் குரங்குகள் கடந்த சில நாட்களாக உயிரிழந்து வருகின்றன. விலங்குகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதா? என்பதை கால்நடை பராமரிப்புத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலாத் தளமாக விளங்கி வருகிறது. வார இறுதி நாட்களில் இங்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகளவில் உள்ளது. கரோனா ஊரடங்கு காலத்தில் ஏலகிரி மலைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஏலகிரி மலைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாகவே காணப்படுகிறது.

ஏலகிரி மலையில் 30-க்கும்மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு, ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். பள்ளி, கல்லூரி, நட்சத்திர விடுதிகள், பொழுதுபோக்குடன் கூடிய விளையாட்டு அரங்கள் என ஏராளமானவை உள்ளன. ஏலகிரி மலையை சுற்றி பல ஏக்கர் பரப்பில் வனப்பகுதியும் உள்ளது.

அடர்ந்த வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக, புள்ளிமான்கள், குரங்குகள், மலைபாம்புகள், அரிய வகை பறவை இனங்கள் அதிகளவில் வசித்து வருகின்றன.

ஏலகிரி மலையில் உள்ள வளைவு பாதை முழுவதும் குரங்குகளை அதிகமாக காணமுடியும். மலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தாங்கள் கொண்டு வரும் உணவுப்பொருட்களை குரங்குகளிடம் வழங்கி மகிழ்வார்கள். இந்நிலையில், கடந்த சில நாட்களாக மலையையொட்டியுள்ள வனப் பகுதியில் ஏராளமான குட்டி குரங்குகள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடப்பதை சுற்றுலாப் பயணிகள் கண்டு திடுக்கிட்டனர்.

உயிரிழந்த குரங்குகளை அப்புறப்படுத்த அருகே சென்றால் பெரிய குரங்குகள் ஆவேசமடைந்து கூச்சலிடுவதால், உயிரிழந்த குரங்குகளை அகற்றவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், கடந்த சில நாட்களாக ஏலகிரி மலையைச் சுற்றி தொடர் மழை பெய்து வருவதால் வனவிலங்குகளுக்கு மர்ம நோய் தொற்று ஏதாவது ஏற்பட்டுள்ளதா? விலங்குகளை கொல்ல யாராவது உணவில் விஷம் வைத்து அதன் மூலம் குரங்குகள் உயிரிழக்கின்றனவா? அல்லது கரோனா உள்ளிட்ட வைரஸ் தொற்றுகள் மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளிடமும் வேகமாக பரவி வருவதால் அதன் மூலம் உயிரிழப்பு சம்பவம் அதிகரிக்கிறதா? என்பதை கால்நடை பராமரிப்புத்துறையினர் ஏலகிரி மலையில் மருத்துவ முகாம் நடத்தி, குரங்குகளின் மர்ம மரணத்துக்கான காரணங்களை கண்டறிந்து, அதற்கான மருத்துவ சிகிச்சையை அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் நவநீத கிருஷ்ணன், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘விலங்குகளுக்கு குறிப்பாக பசுக்களுக்கு கோமாரி நோய் ஏற்பட்டு அதன் மூலம் சில இடங்களில் பாதிப்பு இருந்தது. அவற்றை உடனடியாக ஆய்வு செய்து சரி செய்துள்ளோம்.

ஏலகிரி மலையில் குரங்குகள் உயிரிழப்பு சம்பவம் குறித்து ஆய்வு நடத்தப்படும். ஏலகிரி மலையிலேயே கால்நடை பராமரிப்புத்துறை செயல்பட்டு வருகிறது. அங்குள்ள மருத்துவர்கள் மூலம் உயிரிழந்த குரங்குகளின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனை செய்து மர்ம மரணத்துக்கான காரணம் என்ன என்பது கண்டறியப்படும். அதற்கான பணிகள் உடனடியாக தொடங்கப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்