திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள் 9.50 லட்சம் பேர் உள்ளனர். அதில், இதுவரை 4.20 லட்சம் நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 5.30 லட்சம் நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங் களில் தினசரி கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இது தவிர நடமாடும் மருத்துவக்குழு மூலம் கிராமப் பகுதிகளில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
208 கிராம ஊராட்சிகளில் தலா ஒரு மருத்துவக்குழு அமைக்கப்பட்டு அக்குழுவினர் வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தாத நபர்களை கண்டறித்து அவர்களுக்கு கரோனா தடுப்பூசியை செலுத்தி வருகின்றனர். கரோனா தடுப்பூசி 100 சதவீதம் செலுத்திய மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டத்தை கொண்டு வர மாவட்ட நிர்வாகம் தீவிர முயற்சியை மேற்கொண்டு அதற்கான பணிகளை துரிதப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மதனாஞ்சேரி, கிரிசமுத்திரம், ஜாப்ராபாத், தேவஸ்தானம் உள்ளிட்ட ஊராட்சிக்கு உட்பட்ட கிராமப்பகுதிகளில் நடமாடும் மருத்துவக்குழுவினர் ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையில் வீடு, வீடாக நேற்று சென்று பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசியை செலுத்தினர்.
பிறகு, அப்பகுதியில் விவசாயநிலங்களில் வேர்க்கடலை அறுவடையில் ஈடுபட்டு வந்த விவசாய கூலித்தொழிலாளிகளுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 426 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 620 நபர்களுக்கு 2-ம் தவணை தடுப்பூசி என 1,046 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி நேற்று செலுத்தப்பட்டதாகவும், கரோனா தடுப்பூசியால் எந்தவித பக்கவிளைவும் இல்லை,
கிராம மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயக்கம் காட்டக்கூடாது என மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் செந்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக நேற்று 8 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. 20 பேர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். உயிரிழப்பு இல்லை.
தற்போது 98 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago