காவிரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் : பள்ளிபாளையம் 21-வது வார்டு மக்கள் கோரிக்கை

பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 21-வது வார்டு காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. இந்த வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ஏராளமான குடியிருப்புகள், வணிக வளாக நிறுவனங்கள் அமைந்துள்ளன. இங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் பெரிய கால்வாய் வழியாக நேரடியாக காவிரி ஆற்றில் கலக்கிறது.

இதனால், காவிரி நீர் பாதிப்படைவதுடன், மீன் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்களும் பாதிப்பிற்குள்ளாகி வருகிறது. ஆற்றையொட்டி கழிவு நீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், கொசு உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது:

பள்ளிபாளையத்தில் சாயக்கழிவு நீர் பிரச்சினை பல ஆண்டுகளாக உள்ளது. இச்சூழலில் நகரப் பகுதியில் சேகரமாகும் கழிவு நீர் அனைத்தும் காவிரி ஆற்றில் கலக்கப்படுகிறது. 21-வது வார்டு வழியாக வரும் கால்வாய் மழைநீ்ர் செல்லும் வாய்க்காலாகும்.

கடந்த இரு வாரத்துக்கு முன்னர் பெய்த மழையின்போது இந்த வாய்க்காலில் கழிவு நீருடன், மழைநீரும் கலந்து அருகேயுள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதனால், மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இக்கால்வாயில் கழிவு நீர் செல்லாத வகையில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் காவிரி ஆறு பாதுகாக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE