ஈரோடு மாநகரில் பழுதடைந்த சாலைகளால் தொடரும் விபத்துகள் : போர்க்கால அடிப்படையில் சரி செய்யக் கோரிக்கை

By செய்திப்பிரிவு

ஈரோட்டில் பொதுமக்கள் அதிகம் பயணிக்கும் அனைத்து முக்கிய சாலைகளும் மேடு, பள்ளமாக பழுதடைந்து காணப்படுவதால், தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

ஈரோடு மாநகராட்சிக்குப்பட்ட பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம், பாதாளச் சாக்கடைத் திட்டப்பணிகளுக்கான வேலைகள் பல்வேறு இடங்களில் நடந்து வருகின்றன. இதன் காரணமாக, பூங்கா சாலை, மூலப்பட்டறை, காவிரிசாலை, கருங்கல்பாளையம், மரப்பாலம், கள்ளுக்கடை மேடு சாலை, ஜீவானந்தம் வீதி, வீரப்பன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் தோண்டப்பட்டுள்ளது. இதேபோல், ஜவுளிக்கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அதிகம் உள்ள காமராஜர் சாலை, ஆர்.கே.வி.சாலை, மணிக்கூண்டு, நேதாஜி சாலை, மாதவகிருஷ்ணா வீதி உள்ளிட்ட பகுதிகளிலும் சாலைகள் தோண்டப்பட்டுள்ளது. இவற்றைச் சீரமைக்காததால், இப்பகுதியில் பயணிக்கும் இரு சக்கர வாகனஓட்டிகள், நடந்து செல்பவர்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் விட்லாபுரியைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி சுந்தரேசன் (59). இவரது மனைவி மோகனா (55), இவர்கள் இருவரும் ஜவுளி வாங்குவதற்காக, இரு சக்கர வாகனத்தில் பூங்கா சாலையில் சென்றபோது, பின்னால் வந்த லாரி மோதியது.

இதில், இருவரும் நிலைதடுமாறி விழுந்தனர். அப்போது லாரியின் சக்கரம் மோகனாவின்மீது ஏறியதில் அவர் உயிரிழந்தார். விபத்து நடந்த பகுதியில் சாலை சேதமடைந்து, மேடு, பள்ளமாக இருப்பதால், தொடர்ந்து இங்கு பல்வேறு விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:

தீபாவளிப் பண்டிகை நெருங்கும் நிலையில் ஜவுளி உள்ளிட்ட பொருட்களை வாங்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் ஈரோடு வருகின்றனர். ஈரோட்டில் ஆர்கேவி சாலை, நேதாஜி சாலை, மணிக்கூண்டு போன்ற இடங்களில் கூட்டம் அலைமோதுகிறது. இவ்விடங்களில் சாலையில் சாதாரணமாக நடந்து சென்றாலே, தடுமாறி விழும் அளவுக்கு சாலைகள் மோசமாக உள்ளன.

பல நேரங்களில் பாதசாரிகள் மீது வாகனம் மோதுவது, சாலையில் உள்ள பள்ளங்களால், இரு சக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாவதும் தொடர்கதையாகி வருகிறது. அடிக்கடி மழை பெய்வதால், சாலைகளில் பள்ளம் எங்கு இருக்கிறது என்பது தெரியாமல் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, குறிப்பிட்ட இந்த சாலைகளையாவது, உடனடியாக இரவு நேரத்தில் போர்க்கால அடிப்படையில் சரி செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தீபாவளி பண்டிகை முடியும்வரை, மூன்று திட்டப்பணிகளுக்காக சாலையைத் தோண்டுவதை நிறுத்தி வைக்க வேண்டும், என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்