தொடர் விடுமுறையால் - ஏற்காட்டில் குவியும் சுற்றுலாப் பயணிகள் : மலைப்பாதையில் மண் சரிவு சீரமைக்கும் பணி தீவிரம்

தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஏற்பாட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனிடையே, இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் ஏற்பட்ட மண் சரிவை சீர் செய்யும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் ஏற்காட்டுக்கு சென்னை, கோவை உட்பட தமிழகம் முழுவதும் இருந்தும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறை தினத்தை தொடர்ந்து சனி, ஞாயிறு வார விடுமுறை விடப்பட்டுள்ளதால், ஏற்காட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

ஏற்காடு படகுத் துறை, மான் பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ட்ஸ் சீட், சில்ரன்ஸ் பார்க், ரோஸ் கார்டன்,பக்கோடா பாயின்ட், சேர்வராயன் கோயில் உள்ளிட்ட பல இடங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. ஏற்காடு ஏரியில் குடும்பத்தினருடன் பயணிகள் படகு சவாரி செய்து, மகிழ்ச்சியடைந்தனர். தற்போது ஏற்காட்டில் குளுமையான சீதோஷ்ண நிலையும், பனி மூட்டம் அதிகமாக காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

ஏற்காட்டில் பல இடங்களில் திடீர் நீர்வீழ்ச்சி உருவாகி, தண்ணீர் கொட்டி வருகிறது. மேலும், கிளியூர் நீர் வீழ்ச்சியில் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டி வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகள் பலரும் நீர் வீழ்ச்சிக்கு சென்று ஆசை தீர குளித்து வருகின்றனர்.

தொடர் விடுமுறை காரணமாக ஏற்காட்டில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் நிரம்பி உள்ளன. மேலும், சாலையோர கடைகள் உள்பட வியாபார ஸ்தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியதால், ஏற்காடு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மண் சரிவு சீரமைப்பு தீவிரம்

ஏற்காடு மலைப்பாதையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மண் சரிவு ஏற்பட்டது. இதனால், ஏற்காடு அடிவாரத்தில் இருந்து வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும், வாகனங்கள் குப்பனூர் வழியாக ஏற்காடு செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் சாலையை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்று விஜயதசமியை முன்னிட்டு ஏராளமானோர் ஏற்காட்டுக்கு சென்றனர். அடிவாரம் சோதனைச் சாவடி வழியாக இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. மேலும், கனரக வாகனங்களான பேருந்து, லாரி உள்ளிட்டவை குப்பனூர் வழித்தடத்தில்ஏற்காட்டுக்கு சென்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்