சேலம் மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் - மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்க ஆணையரிடம் ரூ.2.85 லட்சம் வழங்கல் :

சேலம் மாநகராட்சிப் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்பு தொகை ரூ.2.85 லட்சத்தை மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜிடம் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் வழங்கினர்.

மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதன் அடிப்படையில் நீர் நிலைகள் புனரமைத்தல், பூங்காக்கள் அமைத்தல், பராமரித்தல், விளையாட்டு மைதானங்கள் ஏற்படுத்துதல், நீரூற்றுகள், தெரு விளக்குகள், மரம் வளர்த்தல், பள்ளி, கல்லூரி வகுப்பறைகள் கட்டுதல், மேம்படுத்துதல், மருத்துவமனைகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், தடுப்புச்சுவர் அமைத்தல், நவீன நூலகம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதுபோன்ற பணிகளை மேற்கொள்வதற்காக திட்ட மதிப்பீட்டில் மூன்றில் ஒரு பங்கு தொகையை பொதுமக்கள் பங்களிப்பாக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நிதி வழங்கினால், இரண்டு பங்கு நிதியை அரசு மூலம் பெற்று திட்டம் செயல்படுத்தப்படும். அதன் அடிப்படையில் சேலம் மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்தும் வகையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு 150-க்கும் மேற்பட்ட குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளுடன் மாநகராட்சி ஆணையர் ஆலோசனை நடத்தினார். நமக்கு நாமே திட்டத்தை மாநகராட்சிப் பகுதியில் சிறப்பான முறையில் செயல்படுத்த சங்கங்கள் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதன்படி, சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்துக்கு உட்பட்ட  காளியம்மன் கோயில் தெரு குடியிருப்போர் நலச்சங்கத்தின் மூலம் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் மூன்றில் ஒரு பங்கு பொது மக்கள் பங்களிப்பாக ரூ.2.85 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. இரண்டு மடங்கு அரசு நிதி உதவியுடன் ரூ.8.50 லட்சம் மதிப்பில் 181 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கப்படவுள்ளது.

பொதுமக்கள் பங்களிப்பான ரூ.2.85 லட்சத்துக்கான காசோலையை மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜிடம் குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் புஷ்பராஜ், துணைத் தலைவர் தங்கதுரை, செயலாளர் கந்தன் வழங்கினர். நிகழ்வில் உதவி பொறியாளர் மலர் இருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்