தீபாவளியை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் - கோ-ஆப்டெக்ஸில் ரூ.20 கோடி விற்பனை இலக்கு : நாகை மாவட்டத்தில் ரூ.1.35 கோடிக்கு விற்பனை செய்ய திட்டம்

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழாண்டு தீபாவளிக்கு கோ-ஆப்டெக்ஸில் ரூ.20 கோடிக்கு சிறப்பு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் கோ-ஆப்டெக்ஸ் வைரம் விற்பனை நிலையத்தில், தீபாவளி- 2021 சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையை நேற்று தொடங்கிவைத்த ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 86 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து, நாடு முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து, நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில், ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது தமிழக அரசு வழங்கும் 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன்படி, நிகழாண்டு இந்த சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டுச் சேலைகள், காஞ்சிபுரம், ஆரணி, தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுச் சேலைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு சேலைகள், திருபுவனம் பட்டுச் சேலைகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்திச் சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு ரகங்கள், பருத்திச் சட்டைகள், திரைச்சீலைகள், கால் மிதியடிகள், நைட்டீஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் என ஏராளமானவை தருவிக்கப்பட்டுள்ளன.

மேலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் குந்தவை விற்பனை நிலையம், வைரம் விற்பனை நிலையம், கும்பகோணம், பட்டுக்கோட்டை விற்பனை நிலையங்கள் என 4 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

கடந்த தீபாவளி 2020 பண்டிகைக் காலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.7.38 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, தீபாவளிக்கு ரூ.20 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றார்.

விழாவில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ப.அம்சவேணி, முதுநிலை மேலாளர் (வடிவமைப்பு மற்றும் உற்பத்தி) இரா.சீனிவாசன், துணை மண்டல மேலாளர் (நிர்வாகம்) மு.அன்பழகன், வைரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் ரெ.சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நாகை மாவட்டத்தில்...

நாகை கடைத் தெருவில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை தொடக்க நிகழ்ச்சி ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் முதல் விற்பனையை தொடங்கிவைத்தார்.

பின்னர், அவர் பேசியதாவது:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோ-ஆப்டெக்ஸ் மூலம் விற்பனை செய்ய நாகை விற்பனை நிலையத்துக்கு ரூ.75 லட்சம், வேதாரண்யம் விற்பனை நிலையத்துக்கு ரூ.60 லட்சம் என நாகை மாவட்டத்தில் மொத்தம் 1.35 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 30 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுவதுடன், அரசு ஊழியர்களுக்கு தவணை முறையில் பணம் செலுத்தும் வசதியும் உள்ளது என்றார். நிகழ்ச்சியில், எம்எல்ஏ நாகை மாலி, கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளர் சௌ.சாதிக் அலி, வர்த்தக மேலாளர் கந்தசாமி, நாகை கிளை மேலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்