கரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் வழிபாட்டுத்தலங்களுக்குள் பக்தர்கள் நுழைய தமிழக அரசு அனுமதியளித்ததால், வெள்ளிக்கிழமையான நேற்று விஜயதசமியையொட்டி ஏராளமான பக்தர்கள் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினர்.
கரோனா தொற்று பரவல் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத்தலங்களுக்குள் பக்தர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதனால், அனைத்து கோயில் கள், பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ ஆலயங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து, வாரத்தின் அனைத்து நாட்களிலும் கோயில்களுக்குள் பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துவந்தனர்.
இந்நிலையில், தற்போது கரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்ததையடுத்து, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் வழிபாட்டுத்தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்ததால், நாகை மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்காரவேலவர் கோயில், மயிலாடுதுறையில் மயூரநாதர் சுவாமி கோயில், திருக்கடையூர் கோயில் உட்பட அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் நேற்று பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
குறிப்பாக, வெள்ளிக்கிழமையான நேற்று விஜயதசமி தினம் என்பதால், கோயிலுக்குள் நுழைய பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது பொதுமக்களை மகிழ்ச்சியடைய செய்தது. இதனால், ஏராளமான பக்தர்கள் நேற்று ஆர்வத்துடன் கோயில்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். கோயிலுக்கு முகக்கவசம் அணிந்து வந்த பக்தர்களுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டு, சமூக இடைவெளியைப் பின்பற்றி உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
திருச்சி மாவட்டத்தில்...
ரங்கம் ரங்கநாதர் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், உறையூர் வெக்காளியம்மன் கோயில், மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் நேற்று ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபாடு நடத்தினர்.பல கோயில்களில் விஜயதசமியையொட்டி வித்யாரம்பம் நிகழ்வு நடைபெற்றது. கோயில் வளாகத்தில் அம்மன் சன்னதி முன்பு நெல்லை பரப்பி, அதில் குழந்தைகளை எழுத வைத்தனர்.
கரூர் மாவட்டத்தில்...
கரூர் தொழிற்பேட்டையில் கல்யாண சுப்ரமணியர் கோயில் உள்ளது. இங்கு சரஸ்வதி, ஹயக்ரீவர் ஆகியோருக்கு தனி சந்நிதிகள் உள்ளன. விஜயதசமியையொட்டி சஷ்டி குழு சார்பில் சரஸ்வதி, ஹயக்ரீவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஹோமம், யாகம் ஆகியவை நடைபெற்றன. இதில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பங்கேற்று, நெல்லை பரப்பி, ‘அ’ என எழுதி அட்சரபியாசம் நடைபெற்றது. குழந்தைகளுக்கு நோட்டு, பேனா, பென்சில், சுவாமி படம், பிரசாதம் வழங்கப்பட்டன.நிகழ்வில், சஷ்டி குழுத் தலைவர் மேலை பழநியப்பன், நிர்வாகி கார்த்திகேயன், ஆநிலை பாலமுருகன், மருதாசலம், தர்மர், சண்முகநாதன், ரஜினி வையாபுரி, சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago