நெல்லை- தென்காசி சாலையில் - சுங்கச் சாவடி அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் : விக்கிரமராஜா கோரிக்கை

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா ஆலங்குளத்தில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

பண்டிகைக் காலங்களில் இரவு நேர கடைகள் செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும். தென்காசி- திருநெல்வேலி நான்குவழிச் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும். சாலை விரிவாக்கத்தின்போது அகற்றப்பட்டு வரும் மரங்களுக்கு பதிலாக புதிய சாலையின் இரு புறங்களிலும் கூடுதல் மரங்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்.

இந்த சாலையில் சுங்கச்சாவடி அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. சென்னை மாநகராட்சியில் செயல்பட்டு வந்த 4 சுங்கச் சாவடிகளை தற்போதைய அரசு அகற்றி உள்ளது. கூடுதலாக உள்ள சுங்கச் சாவடிகளையும் அகற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல தென்காசி - திருநெல்வேலி நான்குவழிச் சாலையிலும் சுங்கச் சாவடி அமைக்க அரசு அனுமதி வழங்கக் கூடாது. இது தொடர்பாக முதல்வருக்கு வணிகர் சங்கம் சார்பில் கோரிக்கை அளிக்கப்படும்.

வெளி நாடுகளில் இருந்து பாதுகாப்புக்காக மெழுகு பூசி வரும் ஆப்பிள் போன்ற பழங்களை கடைகளில் வந்து ஆய்வு செய்து பறிமுதல் செய்யாமல், அவை எங்கிருந்து வருகிறதோ அங்கேயே தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலங்குளத்தில் காய்கறி பதப்படுத்தும் மையம் அமைக்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE