குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் சூரசம்ஹாரம் : பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழாவின் 10-ம் நாளான நேற்று நள்ளிரவு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்படவில்லை.

இக்கோயிலில் கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய சூரசம்ஹார விழாவில், தினமும் இரவு 8.30 மணிக்கு அம்மன் பல்வேறு வாகனங்களில், விஸ்வகர்மேஸ் வரர், பார்வதி, பாலசுப்பிரமணியர், நவநீதகிருஷ்ணர், மகிசாசூரமர் த்தினி, ஆனந்த நடராஜர், கஜலட்சுமி, கலைமகள் ஆகிய திருக்கோலங்களில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

கரோனா கட்டுப்பாடுகள் காரண மாக அந்தந்த ஊர்களில் உள்ள கோயில்களில் காப்பு அணிந்த பக்தர்கள் மற்றும் தசரா குழுவினர் பல்வேறு வேடங்களை அணிந்தும், கிராமங்களில் மட்டும் கரகாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளை நடத்தியும் அம்மனுக்கு காணிக்கை வசூலித்தனர்.

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் விழாவில் பக்தர்கள், தசரா குழுவினர் பங்கேற்க மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டன. அதன்படி கொடியேற்றம், சூரசம்ஹாரம் மற்றும் விழாவின் 8, 9, 10, 15, 16, 17 ஆகிய தேதிகளில் பக்தர்கள் முழுமையாக அனுமதிக்கப்படவில்லை. மற்ற நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் கரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது. நேற்று காலை 9.30 மணிக்கு மகா அபிஷேகமும், 10 மணிக்கு சூலாயுதத்துக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு சிம்ம வாகனத்தில் கோயில் முன் எழுந்தருளிய அம்மன் பல்வேறு வேடங்களில் வலம் வந்த மகிசாசூரனை சம்ஹாரம் செய்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இன்று அதிகாலை 3 மணிக்கு உற்சவமூர்த்தி அம்மன் அபிஷேக ஆராதனைக்கு எழுந்தருளல், 6 மணிக்கு உற்சவமூர்த்தி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. மாலை 5 மணிக்கு அம்மன் கோயிலை வந்தடைந்தவுடன் கொடியிறக்கப்பட்டு காப்பு களைதல் நடைபெறும். இந்நிகழ்ச்சியிலும் பக்தர்கள் பங்கேற்க அனுமதி கிடையாது.

கொடியிறக்கத்தைத் தொடர்ந்து காப்பு அணிந்த பக்தர்கள் தங்கள் ஊர்களில் உள்ள கோயில்களில் காப்பு களைந்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என கோயில் நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிப்பாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு விதிக்கப்ப ட்டிருந்த தடை நேற்று முதல் விலக்கப் பட்டுள்ளது.

இருப்பினும் குலசேகரன் பட்டி னம் கோயில் தசரா விழாவில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி பக்தர்கள் தரிசனத்துக்கு நாளை வரை தடை தொடரும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப் பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்