மாநில அளவிலான தடகளம் மற்றும் மராத்தான் போட்டிகளில் திருப்பத்தூர் மாவட்ட மாணவ, மாணவிகள் முதல் மற்றும் 2-ம் இடம் பிடித்து பதக்கங்களை வென்றுள்ளனர். அவர்களுக்கு மாவட்ட தடகள சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப் பட்டது.
மாநில அளவில் மாரத்தான் போட்டிகள் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. அதில், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத் தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இருந்து 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதில், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த மாணவி தனிஷ்கா 5 கி.மீ மராத் தான் போட்டியில் முதலிடம் பெற்று பதக்கம் வென்றார். அதே போல, ஜோலார்பேட்டை மாணவி மகா லட்சுமி 2-ம் இடத்தை பிடித்து பதக்கம் வென்றார்.
அதேபோல, கடந்த 10-ம் தேதி கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில் 14 வயதுக்குட்பட்ட பிரிவில் 200 மீ., ஓட்டப்பந்தயத்தில் ஜோலார்பேட்டை மாணவர் நித்தின் குமார் 3-வது இடத்தையும், 17 வயதுக்குட்பட்ட பிரிவில் 200 மீ., ஓட்டப்பந்தயத்தில் ஜோலார்பேட்டை மாணவர் சாம் கிறிஸ்டோபர் 3-வது இடத்தை வென்று பதக்கம் வென்றார்.
விளையாட்டுப்போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு விளையாட்டு கழகம் சார்பில் சான்றிதழ்கள், பதக்கம் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இதனையடுத்து, தடகளம் மற்றும் மராத்தான் போட்டிகளில் பரிசுகளை வென்ற ஜோலார்பேட்டை மாணவ, மாணவிகளுக்கு ஜோலார் பேட்டையில் உள்ள அரசு மினி விளையாட்டு அரங்கில், திருப்பத்துார் மாவட்ட தடகள சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago