கரூர் மாவட்டத்தில் வேலை தேடுபவர்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் இடையே பாலமாக மாவட்ட நிர்வாகம் செயல்படும் என ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலை தேடும் நபர்களுக்கு இந்திய தொழில் கூட்டமைப்பினரின் (சிஐஐ) உதவியுடன் உள்ளூரிலேயே தனியார் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்த ஆலோனைக்கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து, ஆட்சியர் த.பிரபுசங்கர் பேசியது: கரூர் மாவட்டத்தில் உள்ள வேலை தேடுவோருக்கு கரூர் மாவட்டத்திலேயே உள்ள தொழில்நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை வழங்க மாவட்ட நிர்வாகம் முயற்சி எடுத்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்புக்காக சிறப்பு இணையதளம் உருவாக்கப்பட்டு, வேலை தேடுபவர்களையும், வேலை கொடுக்கும் தொழில் நிறுவனங்களையும் ஒருங்கிணைக்க வேண்டும். இந்த இருதரப்புக்கும் இடையே பாலமாக மாவட்ட நிர்வாகம் செயல்படும். மேலும், ஏற்றுமதி ஜவுளி உற்பத்தி, பேருந்து கட்டுமானம் போன்ற தொழில்களுக்கு தேவைப்படும் பணியிடங்கள் குறித்து ஆய்வு செய்து, அவற்றுக்கு தேவையான படிப்புகளை அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதிதாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் நகர வாழ்வாதார மையம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் மூலம் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் வசிக்கும் மக்களில் எலெக்ட்ரீசியன், பிளம்பர், தையல் உள்ளிட்ட பணிகளில் பயிற்சி பெற்றவர்களின் விவரம் karurclc@gmail,com என்ற இணையதளத்தில் சேகரிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலத்தில் இந்த இணையதளத்தின் மூலம் கரூர் மாவட்டத்தில் உள்ள தொழில்களுக்கு தேவைப்படும் பணிகளுக்கான பயிற்சிகளை ஒருங்கிணைத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அவ்வாறு பயிற்சி அளிக்கப்பட்ட அனைவருக்கும் உள்ளூரிலேயே பணிநியமன ஆணைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கூட்டத்தில், இந்திய தொழில் கூட்டமைப்பு மாவட்ட துணைத் தலைவர் வெங்கடேசன், திறன் வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், இணை ஒருங்கிணைப்பாளர் வசந்தகுமார், காணியாளம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் தேன்மொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago