திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நிர்வாக சீர்கேட்டைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்துக்கு, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி.கோமதி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கே.பி.ஜோதிபாசு, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.ஹரிசுர்ஜித் ஆகியோர் தலைமை வகித்தனர். முற்றுகைப் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி தொடங்கி வைத்தார்.
போராட்டத்தில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய நோய் பிரிவு, சிறுநீரக பிரிவு, புற்றுநோய் பிரிவு போன்றவற்றை தொடங்க வேண்டும். இறப்பு பதிவுகளை முறையாக செய்ய வேண்டும். அனைத்துப் பிரிவு காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். சுகாதார சீர்கேடுகளை அன்றாடம் சரிசெய்ய வேண்டும், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் பணிநேரத்தில் பணியில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். கல்லூரி முதல்வர், கண்காணிப்பாளர், மருத்துவர்களின் செல்போன் எண்களை பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்திய மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ், உடனடியாக நிறைவேற்றக்கூடிய கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாகவும், மற்ற கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago