தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 355 மனுக்களை பொதுமக்களிடமிருந்து ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பெற்றுக்கொண்டார்.
இதில், ஏஐடியுசி டாஸ்மாக் மாவட்டச் செயலாளர் எஸ்.கோடீஸ்வரன், மாவட்டத் தலைவர் ந.இளஞ்செழியன், தொமுச மாவட்டச் செயலாளர் டி.கிருஷ்ணமூர்த்தி, விற்பனையாளர் சங்க நிர்வாகி துரை.ரமேஷ், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பாஸ்கரன், ஆசைத்தம்பி, பிஎம்எஸ் நிர்வாகி சுரேஷ் உட்பட அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்க நிர்வாகிகளும் சேர்ந்து அளித்த மனுவில், டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணிநேரத்தில் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். இரவு கடை மூடும் நேரத்தில் ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் போலீஸாரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
செங்கிப்பட்டி அருகே பாலையப்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் குளுக்கோஸ் உள்ளிட்ட மருந்துகள் போதிய அளவில் இல்லாததால், பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக கூறி, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தஞ்சாவூர் ஆட்சியரிடம் மனு வழங்கினர். மேலும், இக்கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஒருவருக்கு முதியோர் உதவித்தொகை வழங்குவதற்கான ஆணை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒருவருக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித் தொகை பெறுவதற்கான ஆணை மற்றும் ஒருவருக்கு மாற்றுத்திறனாளி அடையாள அட்டை ஆகியவற்றை ஆட்சியர் வழங்கினார்.
நாகப்பட்டினத்தில்...
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில், வங்கிக்கடன், புதிய ரேஷன் கார்டு, கல்வி உதவித்தொகை உள்ளிட்டவை கோரி பொதுமக்களிடம் இருந்து 138 மனுக்கள் பெறப்பட்டன. பின்னர், மாற்றுத் திறனாளிகள் 4 பேருக்கு ரூ.67,500-க்கான வங்கிக் கடன் மானியம், 6 பேருக்கு ரூ.1.08 லட்சத்தில் மடக்கு சக்கர நாற் காலிகளை ஆட்சியர் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் வி.சகிலா, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago