நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக படகில் ரூ.2 கோடி மதிப்பிலான 280 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற வழக்கில், தேடப்பட்டு வந்த 4 பேர் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர்.
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக, செப்.27-ம் தேதி கிடைத்த தகவலின்பேரில், சுங்கத்துறை உதவி ஆணையர் செந்தில்நாதன் உள்ளிட்டோர் நாகை கீச்சாங்குப்பத்தில் ஆய்வு நடத்தினர். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் 8 பேர் மீன்பிடி படகில், பெரிய அளவிலான பொட்டலங்களை ஐஸ்பெட்டியில் வைத்து ஏற்றிக் கொண்டிருந்தனர். அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் பிடிக்க முயன்றபோது, அனைவரும் தப்பியோடி விட்டனர்.
பின்னர், அதிகாரிகள் மீன்பிடி படகை சோதனை செய்து, அதிலிருந்த ரூ.2 கோடி மதிப்பிலான 280 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய 8 பேரை சுங்கத் துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில், தஞ்சாவூர் இன்றியமையாத பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்னிலையில், மீன்பிடி படகு உரிமையாளர் குணசீலன், விஜய், சிவச்சந்திரன், மற்றொரு குணசீலன் ஆகிய 4 பேர் நேற்று சரணடைந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, 4 பேரையும் அக்.25-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, 4 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago