தேசப்பிதா மகாத்மா காந்தி பயணம் செய்து பல ஆண்டுகள் கடந்த பிறகும் திண்டுக்கல், பழநி, காந்திகிராமம் என காந்தியடிகள் தன் காலடிச்சுவடுகளைப் பதித்துவிட்டுச் சென்றது இன்றும் நினைவு கூரத்தக்கதாக உள்ளது.
விடுதலை வேட்கையை மக்க ளிடம் ஏற்படுத்த நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டார் மகாத்மா காந்தியடிகள். இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல், மதுரைக்கு வந்து சென்றார். திண்டுக்கல்லுக்கு முதன்முறையாக 1934 பிப்.7 -ல் வந்தவர் மலைக்கோட்டை அடிவாரப் பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில் மக்களிடையே பொதுக்கூட்டத்தில் பேசினார். இந்த இடம் பின்னர் காந்தி மைதானம் என அழைக்கப்பட்டது. தற்போது காந்தி காய்கறி மார்க்கெட்டாகவும் மாறியுள்ளது.
மகாத்மா காந்தி திண்டுக்கல் வந்தபோது தாடிக்கொம்பு சாலை யில் உள்ள பால்சாமி அய்யர் சத்திரத்தில் தங்கி உள்ளார்.
இந்தச்சத்திரம் இன்னமும் பழமை மாறாமல் காட்சியளிக்கிறது. காந்தியடிகள் இந்தச் சத்திரத் துக்கு வந்து சென்றதன் நினை வாக கல்வெட்டு ஒன்றும் வைக்கப் பட்டுள்ளது.
பழநிக்கு இருமுறை காந்தி யடிகள் சென்றுள்ளார். முதல் முறையாக 1934-ம் ஆண்டு தாழ்த் தப்பட்ட சமுதாயத்துக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சிக்காகச் சென்றார். அங்கு அவரிடம் ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.
அந்தக்காலக்கட்டத்தில் பழநி மலைக்கோயிலில் உள்ள முருகனை தரிசிக்க தாழ்த்தப் பட்டோருக்கு அனுமதி மறுக்கப் பட்டிருந்தது.
இதை அறிந்த அவர் சுவாமி தரிசனம் செய்ய பழநி மலைக் கோயிலுக்குச் செல்ல மறுத்து விட்டார். மலைக்கோயிலுக்கு தாழ்த்தப்பட்டோர் செல்ல அனுமதி என்று வழங்கப்படுகிறதோ அன்று மலைக்கோயிலுக்கு வருகிறேன் என்று கூறி பிரசாதத்தை மட்டும் பெற்றுக்கொண்டு சென்றார்.
1946-ம் ஆண்டு ராஜாஜியுடன் ரயிலில் பழநி வந்தார் மகாத்மா. இடைப்பட்ட காலத்தில் தாழ்த்தப் பட்டோர் மலைக்கோயில் சென்று முருகப் பெருமானை தரிசிக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. பழநி ரயில்நிலையம் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய காந்தியடிகள், தீண்டாமையை இந்து சமூகத்தில் இருந்தே முற்றிலும் நீக்க வேண்டும்.
பழநி மலைக்கோயிலுக்குச் செல்ல தாழ்த்தப்பட்டோருக்கு அனுமதியளிக்கப்பட்டதால்தான் நான் இங்கு வந்துள்ளேன், எனப் பேசினார். தொடர்ந்து ராஜாஜியுடன் மலைக்கோயிலுக்குச் சென்று தனது சபதத்தையும் நிறை வேற்றினார். பழநி அருகே அ.கலையம்புத்தூரில் உள்ள வீட்டில் தங்கினார். இருமுறை பழநி வந்தபோது அங்குதான் தங்கியிருந்தார்.
ரயிலில் காந்தி மதுரைக்குச் செல்கிறார் எனத் தகவலறிந்த சின்னாளபட்டி பகுதி மக்கள் அந்த ரயிலை மறித்தனர். காந்தி யின் முகத்தைக் காண கிராமமே திரண்டு நின்றது. ரயிலில் நின்ற படியே மக்களைப் பார்த்து காந்தி யடிகள் கை அசைத்து அவர்களின் வரவேற்பை ஏற்றார். மக்கள் ரயிலை நிறுத்தி காந்தியைக் கண்ட இடம் இன்று காந்தி கிராமமாக உள்ளது. காந்தியை மக்கள் சந்தித்ததன் நினைவாக கல்வெட்டு ஒன்றும் ரயில்பாதை அருகே வைக்கப்பட்டுள்ளது.
காந்திகிராம கிராமிய பல்க லைக்கழகம் இந்தப் பகுதியில்தான் இயங்கி வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் காந்தியின் சுவடுகள் இன்றும் நிலைத்து நிற்கின்றன அவரது நினைவுகளுடன்....
ராஜாஜியுடன் காந்தி மலைக்கோயிலுக்குச் சென்று தனது சபதத்தையும் நிறைவேற்றினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago