திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் நாளை (செப்.20) தொடங்கி 25-ம் தேதி வரை மாபெரும் தூய்மைப் பணி முகாம் தொடங்க உள்ளது.
திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய தூய்மைப் பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி பேசியதாவது:
மழைக் காலங்களில் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் தாழ்வான நீர் தேங்கும் பகுதிகள், பாதாள சாக்கடை ஆகியவற்றில் மழைநீர் தேங்கி, பொதுமக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தடுக்க, அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் மாபெரும் தூய்மைப் பணி முகாம் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முகாமானது வரும் 20-ம் தேதி (நாளை) முதல் 25-ம் தேதி வரை, அந்தந்த மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் நடத்தப்படுகிறது.
மாநகராட்சி மற்றும் நகராட்சியில் உள்ள வார்டுகளை 6 மண்டலங்களாக பிரித்து, ஒவ்வொரு மண்டலத்துக்கும் தூய்மைப் பணியாளர்களை ஏற்பாடு செய்யவேண்டும். மழைநீர் தேங்கும் மிகவும் அபாயகரமான பகுதிகளில் தீவிர கண்காணிப்பு செய்து, தூய்மைப் பணிகளை தொய்வின்றி செய்வதோடு, கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். தூய்மைப் பணிகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மேற்கொள்ள வேண்டும். தூய்மைப் பணிகளுக்கு தேவையான இயந்திரங்கள் வைத்திருக்க வேண்டும். இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்யப்படுவது குறித்த விரிவான செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். இதில் மாநகராட்சியின் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago