நீட் தேர்வு விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் அங்கீகரிக்க வேண்டும் : விசிக தலைவர் திருமாவளவன் வேண்டுகோள்

நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரும் மசோதாவை குடியரசுத் தலைவர் அங்கீகரிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன் சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான ரெட்டை மலை சீனிவாசனின் நினைவு தினத்தைப் போற்றும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவரின் செயல்பாட்டை இன்றைய இளைஞர்களிடம் எடுத்துக் கூற வேண்டும்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ள நீட் தேர்வு விலக்குக் கோரும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டு, சட்டமாக அங்கீகரிக்க வேண்டும்.

மத்திய அரசின் ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்து, நாடு முழுவதும் வரும் 20-ம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவில் போராட்டங்களை நடத்துவது என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. குறிப்பாக, புதிய வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நடத்தப்படும் இப்போராட்டத்தில் ஜனநாயக சக்திகள் அனைத்தும் பங்கேற்க வேண்டும்.

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்கும் விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் வந்தது. அவர் மீது மாற்றுக் கருத்து இருப்பதால் பதவியேற்பு விழாவில் நான் பங்கேற்கவில்லை.

அதிமுக ஆட்சியில் அடி முதல் நுனி வரை ஊழல் நடந்திருப்பதாக அப்போதே பேசப்பட்டது. தற்போது அது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஜிஎஸ்டி வரி விதிப்பையே விசிக எதிர்க்கிறது. ஜிஎஸ்டியை மாநில அரசுகள் வசூலித்து, மத்திய அரசுக்கு கொடுக்கின்றன. ஆனால், மாநிலங்களுக்கு உரிய சதவீதத்தை, மத்திய அரசு முறையாக திரும்பக் கொடுப்பதில்லை. தமிழக அரசுக்கு கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி பல ஆயிரம் கோடி நிலுவையில் உள்ளது.

தமிழகத்தில் மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றக் கூடிய அரசாக, அனைத்து தரப்பு மக்களும் பாராட்டும் வகையில், சமூக நீதி அரசாக தமிழக அரசு செயல்படுகிறது. 9 மாவட்டங்களில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில், திமுக மாவட்டச் செயலர்களோடு கலந்து பேசி, வெற்றி வாய்ப்புள்ள இடங்களை, விசிக கேட்டுப் பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE