ஏற்காடு ஏரியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் - ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணி தீவிரம் : 2 மாதத்தில் முடிக்கத் திட்டம்

ஏற்காட்டில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், ஏற்காடு ஏரியில் படர்ந்து வரும் ஆகாயத்தாமரை செடிகளை முழுமையாக அகற்றும் பணி ரூ.15 லட்சம் செலவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டு மாதத்தில் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காட்டுக்கு தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஆண்டுமுழுவதும் வந்து செல்கின்றனர். இங்கு, சுற்றுலா பயணிகளின் மனம் கவர்ந்த இடங்களில் ஒன்றாக ஏற்காடு ஏரி உள்ளது. ஏரியில் படகு சவாரி செய்வது பயணிகளுக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்காக உள்ளது.

சுமார் 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏற்காடு ஏரியில், ஆகாயத்தாமரைகள் வேகமாக படர்ந்து வருகின்றன. படகு சவாரி செய்யக்கூடிய பகுதிகளில் மட்டும் சுற்றுலாத்துறை சார்பில் ஏற்கெனவே, ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டன. தற்போது படகுப் போக்குவரத்து இடங்களில் மீண்டும் செடிகள் படர்ந்து, ஏரியை ஆக்கிரமித்து வருகின்றன.

எனவே, சுற்றுலாத்துறை சார்பில் ரூ.15 லட்சத்தில் ஆகாயத்தாமரை செடிகளை முழுமையாக அகற்ற திட்டமிடப்பட்டு, அரசிடம் ஒப்புதல் பெறப்பட்டது. இதையடுத்து, கடந்த மாத இறுதியில் ஏற்காடு ஏரியில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணி தொடங்கப்பட்டது. தற்போது இயந்திரம் மூலம் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இது குறித்து ஏற்காடு படகுக்குழாம் மேலாளர் பிரபுதாஸ் கூறுகையில், ‘ஆகாயத்தாமரை செடிகளைஏற்காடு ஏரியில் இருந்து முழுமையாக அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இயந்திரம் மூலம் ஆகாயத்தாமரை அகற்றப்பட்டு வருகிறது. இப்பணிகள் 2 மாதத்துக்குள் முடிக்கப்பட உள்ளது’ என்றார்.

ஏரியின் முழு பரப்பில் இருந்தும்ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்படுவதால், படகு சவாரி செய்பவர்களுக்கு இடையூறு இல்லாத நிலையும், கூடுதல் படகுகளை இயக்கவும் வாய்ப்பு உருவாகி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்