கப்பலில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது - யூரியா சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு : துறைமுகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்

By செய்திப்பிரிவு

காரைக்கால் தனியார் கப்பல் துறைமுகத்தில், கப்பலுக்குள் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, யூரியா கட்டி சரிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

காரைக்கால் மாவட்டம் கீழவாஞ்சூர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கப்பல் துறைமுகத்தில் நேற்று முன்தினம் எகிப்து நாட்டிலிருந்து கப்பலில் வந்த யூரியாவை இறக்கும் பணியில் துறைமுக தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கப்பலின் உள்ளே சிதறிக் கிடந்த யூரியாவை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த கீழவாஞ்சூர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் கணேசமூர்த்தி(24), பனங்குடி முட்டம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் மகன் சிவனேசன்(24) ஆகியோர் மீது பெரிய அளவிலான யூரியா கட்டி சரிந்து விழுந்தது. இதில், கணேசமூர்த்தி அந்த இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த சிவனேசன், நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையறிந்த இருவரின் உறவினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் துறைமுகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த நிரவி-திருப்பட்டினம் தொகுதி எம்எல்ஏ எம்.நாக தியாகராஜனும் மக்களுடன் போராட்டத்தில் பங்கேற்றார். அவர்களுடன் மண்டல காவல் கண்காணிப்பாளர் கே.எல்.வீரவல்லபன், வட்டாட்சியர் மதன்குமார் மற்றும் துறைமுக அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்பட்டதால், போராட்டம் கைவிடப்பட்டது.

இதுகுறித்து எம்எல்ஏ நாக தியாகராஜன் நேற்று கூறியது: இந்த சம்பவத்துக்கு காரணமான துறைமுக அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். காயமடைந்து சிகிச்சையில் உள்ள தொழிலாளிக்கான முழு மருத்துவச் செலவையும் துறைமுக நிர்வாகம் ஏற்க வேண்டும் என பேச்சுவார்த்தையின்போது வலியுறுத்தப்பட்டது. இந்த கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டதால், போராட்டம் முடிவுக்கு வந்தது என்றார். இந்த சம்பவம் குறித்து திருமலைராயன்பட்டினம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE