குழந்தைகள் கொத்தடிமையாக்கப்படுவதை தடுக்க போலீஸ் ரோந்துப் பணி: ஐ.ஜி தகவல் :

குழந்தைகள் கொத்தடிமையாக்கப்படுவதைத் தடுக்க போலீஸார் ரோந்துப் பணி மேற்கொண்டு வருகின்றனர் என மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தெரி வித்தார்.

தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் நேய காவல் அறையை நேற்று தொடங்கி வைத்து, அவர் பேசியது: அனைத்து காவல் நிலையங்களிலும் குழந்தை நேய காவல் அறை தேவைப்படுகிறது. மத்திய மண்டலத்தில் குழந்தைகள் பாதுகாப்புக்காக ஒவ்வொரு கிராமத்திலும் கிராம பாதுகாப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மத்திய மண்டலத்திலுள்ள காவல் நிலையங்களில், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகள் மூலம் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

போக்ஸோ குற்றவாளிகள் மீண்டும் தவறு செய்தால் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும். எனவே, போக்ஸோ குற்றவாளிகளை சரித்திர பதிவேட்டில் பதிவு செய்து, அவர்களைக் கண்காணிக்கிறோம். வட்டிப் பணம் செலுத்த இயலாதவர்களின் குழந்தைகளைக் கடன் கொடுத்தவர்கள் அழைத்துச் சென்று, நவீன கொத்தடிமை முறையை செயல்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகள் கொத்தடிமையாக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், மத்திய மண்டலத்தில் பொது இடங்களில் ஆடு, மாடுகளை மேய்க்கும் சிறார்களைக் கண்காணித்து மீட்க, போலீஸார் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.

இந்நிகழ்ச்சியில், தஞ்சாவூர் டிஐஜி பிரவேஷ்குமார், எஸ்.பி ரவளிப்ரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE