தஞ்சாவூர் அருகே மாரநேரி அய்யனார் ஏரியில் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளை கிராம மக்கள் தடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே மாரநேரியில், 188 ஏக்கர் பரப்பளவில் உள்ள அய்யனார் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, விவசாயி கிருஷ்ணமூர்த்தி என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தொடர்ந்த வழக்கில், 114 ஏக்கர் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதன்படி, பூதலூர் வட்டாட்சியர் ராமச்சந்திரன் தலைமையில், பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் புகழேந்தி, திருவையாறு டிஎஸ்பி ராஜமோகன், பூதலூர் இன்ஸ்பெக்டர் லதா மற்றும் 100 போலீஸார் நேற்று முன்தினம் அய்யனார் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளைத் தொடங்கினர். அப்போது, அந்த இடத்தில் நெல் சாகுபடி செய்துவரும் அப்பகுதி மக்கள், இந்த நிலம் தியாகிகள், அவரது வாரிசுகளுக்கு அரசால் வழங்கப்பட்ட பூமிதான பட்டா நிலம் எனக் கூறி, ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தடுத்தி நிறுத்தினர்.
தொடர்ந்து, நேற்று 2-ம் நாளாக ஆக்கிரமிப்பை அகற்றும் பணிகளை தொடர வந்த அதிகாரிகளை ஏரிக்குள் செல்லவிடாமல் பொதுமக்கள் பாதையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, ஏரியைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, ஏரிக்குள் செல்ல முயன்றபோது, அதிகாரிகளைத் தடுக்க முயன்ற சிலரை போலீஸார் தூக்கிச் சென்று, போலீஸ் வேனில் ஏற்றினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்துசென்றனர். பின்னர், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்றது. போலீஸ் வேனில் ஏற்றப்பட்டவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago