மேலக்கரந்தையில் இளைஞர் மர்ம மரணத்தில் திருப்பம் - முகநூலில் பெண் போல் பழகி ஏமாற்றியதால் கொலை : காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கைது

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மேலக்கரந்தை பகுதியில் மர்மமான முறையில் இளைஞர் இறந்து கிடந்த வழக்கில் அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

எட்டயபுரம் அருகே மேலக்கரந்தையில் உள்ள மயானம் அருகேவேலி காட்டுக்குள் கடந்த 15-ம்தேதி மேலஈரால் கம்மவார் தெருவைச் சேர்ந்த பால்ராஜ் மகன் முருகன்(28) என்பவர் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இதுதொடர்பாக மாசார்பட்டி காவல்ஆய்வாளர் கோகிலா தலைமையில், உதவி ஆய்வாளர் மணிமாறன் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படையினர் விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் செல்போன் விவரங்களை சேகரித்து விசாரணை நடத்தியதில், முருகன் கொலை செய்யப்பட்டதும், காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் பகுதியை சேர்ந்த மாயாண்டி மகன் முருகன் (24) என்பவருக்கு இதில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட முருகன்,2 ஆண்டுகளுக்கு முன்பு அமுதா என்ற பெயரில் போலி முகநூல் கணக்கு உருவாக்கி வைத்துள்ளார். இதனால் அவரை பெண் என நினைத்து, காஞ்சிபுரம் முருகன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று அவரை சந்திக்க எட்டயபுரம் வந்துள்ளார். அப்போது தான் முகநூலில் தன்னுடன் பழகியது பெண் இல்லை என்ற விவரம் அவருக்கு தெரியவந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

கடந்த 14-ம் தேதி காஞ்சிபுரத்தில் இருந்து எட்டயபுரம் வந்த முருகன், மேலஈரால் முருகனை அழைத்துக்கொண்டு, மேலக்கரந்தை மயானப் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் மது அருந்தியுள்ளனர். மயக்க நிலையில் இருந்த மேலஈரால் முருகனுக்கு விஷம் கலந்த மதுவை கொடுத்துள்ளார். இதனை அருந்திய அவர் கீழே விழுந்துள்ளார். அப்போது அவர் மீது கல்லை போட்டு தாக்கி விட்டு காஞ்சிபுரத்துக்கு தப்பிச்சென்றுள்ளார்.

அவசரத்தில் தனது மணிபர்ஸை அவர் அங்கே விட்டுச்சென்றுள்ளார். அதனை எடுக்க நேற்று முன்தினம் அவர் மேலஈரால் வந்த போது தனிப்படையினர் அவரை கைது செய்தனர். இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு கொலை யாளியை கைது செய்த தனிப் படையினரை எஸ்.பி.ஜெயக்குமார் பாராட்டினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE