திருச்சியில் நடப்பாண்டில் இதுவரை 495 பேரிடம் பிணையம் பெற்றுள்ளதாகவும், அவற்றில் நிபந்தனைகளை மீறிய 35 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: திருச்சி மாநகரில் குற்றச் செயல்களை தடுக்கவும், பொது அமைதியை பேணி காக்கவும் மாநகர காவல்துறையால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் மாநகரில் வசிக்கும் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு அந்தந்த காவல் நிலையங்களில் சரித்திர பதிவேடு(History Sheet) பராமரிக்கப்பட்டு வருகிறது.
இப்பதிவேட்டில் உள்ளவர்கள் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி நிர்வாக செயல்துறை நடுவர் மற்றும் சட்டம், ஒழுங்கு துணை ஆணையரால் ஒரு வருட காலத்துக்கும் குறையாமல் பிணையம் பெறப்படுகிறது. இப்பிணையத்தை மீறி குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு, பிணைய காலத்துக்கு மிகாமல் சிறை தண்டனை விதிக்கப்படும்.
இதன்படி நடப்பாண்டில் இதுவரை 456 பேரிடம் பொது அமைதியைப் பேணுவதற்கான பிணையம், 39 பேரிடம் நன்னடத்தைக்கான பிணையம் என மொத்தம் 495 பேரிடம் பிணையம் பெறப்பட்டுள்ளது. இவற்றில் பிணைய நிபந்தனைகளை மீறி செயல்பட்ட 35 பேருக்கு திருச்சி மாநகர நிர்வாக செயல்துறை நடுவர் மற்றும் சட்டம், ஒழுங்கு துணை ஆணையரால் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் யாரேனும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago